July 13, 2020 Monday 07.25 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 23 2020 6:49 AM

'ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!' : தமிழர்களுக்குச் செய்யப்படுகிற பச்சைத்துரோகம் - சீமான் அறிக்கை

Posted Date : Mar 23 2020 6:49 AM

நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை முறையைச் செயல்படுத்தினால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்கு உள்ளாவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இது குறித்து அவர்  வெளியிட்ட அறிக்கை:

" மத்திய அரசு கொண்டு வருகிற 'ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. நாடு முழுமைக்கும் பொது விநியோகத்தை இணைக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மிகப்பெரிய சுரண்டலையும், அபகரிப்பையும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேராபத்து இருக்கிறது.


அகன்ற பாரதத்தை நோக்கமாகக் கொண்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்தழித்து ஒற்றை முகமாக நாட்டை நிலைநிறுத்தத் துடியாய் துடிக்கிறது. அதற்கான முன்நகர்வாகவே, 'ஒரே மொழி! ஒரே நாடு! ஒரே பண்பாடு! ஒரே தேர்தல்! ஒரே தேர்வு! ஒரே பொதுவிநியோகம்! ஒரே தீர்ப்பாயம்! ஒரே குடும்ப அட்டை' என யாவற்றையும் ஒற்றைமுகப்படுத்தும்வேலையில் இறங்கியிருக்கிறது. இவையாவும் இந்நாட்டின் மேன்மைமிக்க கோட்பாடானக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறையாண்மையையும் தகர்க்கும் கொடுஞ்செயலாகும்.

இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தில் முன்மாதிரியாக விளங்கும் மாநிலம் தமிழகமாகும். பொதுவிநியோகப் பகிர்வைச் செயற்படுத்தத் தமிழகம் முழுவதும் இருக்கிற கட்டமைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை.

உணவுப்பாதுகாப்புச் சட்டத்தினை கொண்டுவர முற்பட்டபோது தமிழகம் அதனை எதிர்த்ததற்குக் காரணமும் இதுவேயாகும். பொது விநியோகப் பகிர்வின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். 

ஏற்கனவே, பல இலட்சக்கணக்கான வடஇந்தியர்கள் தமிழகத்திற்குள் உட்புகுந்து வாக்குரிமையைப் பெற்று தமிழர்களின் அரசியலைப் பங்கிடும் வேளையில்,தமிழர்களுக்கான வேலைவாய்ப்பைத் தட்டிப்பறித்துத் தமிழர்களின் பொருளியல் வாழ்வுக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிற சூழலில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர் தாய்நிலம் வடஇந்தியர்களின் படையெடுப்பால் பெரிய அபாயத்தைச் சந்திக்கும்; சொந்த நிலத்திலேயே தமிழர்கள் அகதிகள் போல அல்லாடுகிற நிலை உருவாகும்..

இதற்குத் துணைபோகிற அதிமுக அரசின் செயலானது வாக்குச்செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்தத் தமிழர்களுக்குச் செய்யப்படுகிற பச்சைத்துரோகம். ஆகவே, வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது' எனும் முழக்கத்தை முன்வைத்து தன்னாட்சி உரிமைகேட்ட பேரறிஞர் அண்ணாவின் பேரில் இயங்கும் அதிமுக இத்திட்டத்தில் இணைந்தால் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இத்திட்டத்தில் இருக்கிற பேராபத்தினை உணர்ந்து, தமிழர்களை வடஇந்தியர்கள் சுரண்டுவதற்கும், தமிழர்களைப் பசி பட்டினியில் தள்ளுவதற்கும் வழிவகை செய்கிற 'ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!' திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், எதன்பொருட்டும் அத்திட்டத்தில் இணையக்கூடாது" என்று சீமானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை