June 01, 2020 Monday 10.45 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : May 17 2020 3:08 AM

வங்கதேசம், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையில் மேலும் 3 பேர் உயிரிழப்பு

Posted Date : May 17 2020 3:08 AM

தமிழக சுகாதாரத்துத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மருத்துவமனை யில் நேற்று நிலவரப்படி கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 970 ஆகும். தமிழகத்தில் நேற்று பரிசோதனை செய்ததில் 384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 332 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வங்காள தேசம் நாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் 4 பேர், மராட்டியத்தில் இருந்து வந்தவர்களில் 81 பேர், குஜராத்தில் இருந்து வந்தவர்களில் 7 பேர், ஆந்திராவில் இருந்து வந்தவர்களில் ஒருவர் என மொத்தம் 93 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு நேற்று 447 ஆக உள்ளது.


தமிழகத்தில் நேற்று 10 ஆயிரத்து 535 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரையில் மொத்தம் 3 லட்சத்து 13 ஆயிரத்து 639 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளனர். இதில் ஒருவர் அரசு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் இறந்துள்ளனர். உலக நாடுகளை ஒப்பிடுகையில், தமிழகத்தில் இறப்பு சதவீதத்தை 0.67 என்ற அளவிலேயே தொடர்ந்து வைத்து உள்ளோம்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 939 பேர் குணம் அடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 30 நாட்களாகவும், திருப்பூர் மாவட்டத்தில் 15 நாட்களாகவும், கோவை மாவட்டத்தில் 13 நாட்களாகவும், சேலம், திருவாரூர் மாவட்டத்தில் 10 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையை தக்க வைத்து வருகிறோம். அதே போன்று நாமக்கல், நீலகிரி மாவட்டத்திலும் 7 நாட்களாக கொரோனா தொற்று இல்லை.

தமிழகத்துக்கு வந்த 10 விமானங்களில், 3 விமானங்களில் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கொரோனா கட்டுபாட்டு அறையை முதல்- அமைச்சர் திறந்து வைத்து 85 நாட்கள் உதவி மையம் சிறப்பாக இயங்கி வருகிறது. இரவு-பகலாக அழைப்புகள் வருகிறது.

இதுவரையில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் அழைப்புகள் வந்து உள்ளது. அங்கு மருத்துவர்கள் முழு நேர ஆலோசனையை வழங்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இசஞ்சீவினி செயலி மூலம் வீடியோ அழைப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை தமிழகத்தில் அதிகமானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை 10 ஆயிரத்து 585 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 415 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 477 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் மட்டும் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 3 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 38 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 45 முதியவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை