February 24, 2019 Sunday 11.16 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 4 2019 3:17 PM

டெண்டர் ஊழல்கள் - அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கில் அமைச்சர் வேலுமணிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 

Posted Date : Jan 4 2019 3:17 PM

டெண்டர் பணிகளை ஒதுக்குவதில் அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கில், இதுகுறித்து விளக்கமளிக்க அமைச்சர் வேலுமணிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கம் சார்பில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "கோவை மாநகராட்சிக்கு மட்டும் கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ரூ. 66 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 188 டெண்டர்கள் குறிப்பிட்ட 2 ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள்.

அதேபோல சென்னை மாநகராட்சியில், ரூ. 20 கோடி வருமானம் ஈட்டிய நிறுவனங்களே மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஒப்பந்த பணியில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு, வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, இந்த ஒப்பந்த பணிகள் வழங்குவதில் பெரும் தொகை ஊழல் செய்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.

எனவே, அமைச்சருக்கு எதிரான புகார் குறித்து தமிழக கவர்னரிடம் ஒப்புதல் பெற்று, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உயர்நீதிமன்றம் உருவாக்கவேண்டும். இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு, குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

அதேபோல் இதுகுறித்து விளக்கமளிக்க அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, தமிழக தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு வருகிற 23-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Suggest a
correction
View
Comments
Post
Comments