May 24, 2019 Friday 06.49 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 10 2019 4:04 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு: வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் 

Posted Date : Jan 10 2019 4:04 PM

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்த வழக்கில் வருமான வரித்துறையினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்ற வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் வைர கணேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் அபிராமிபுரம் காவல்நிலையத்தில் உள்ள புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இது தொடர்பாக அபிராமிபுரம் காவல்நிலையத்தில் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து இணை ஆணையர்கள் பணப்பட்டுவாடா விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் இதில் வருமான வரித்துறையினர் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வருமான வரித்துறையினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் மற்றும் தலைமை இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடத்திய சோதனையில் 4 கோடியே 72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக ஏப்., 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணயத்திற்கு புகார் அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ரகசியமானது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகல்கள், அறிக்கைகள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தேர்தல் ஆணயத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர். இதையடுத்து ஆவணங்கள் தங்கள் பார்வைக்கு வேண்டும் என திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால் சீலிட்ட கவரில் உள்ள ஆவணங்களை மனுதாரருக்கு தர வேண்டுமா என்பது குறித்து ஜன., 18ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என நீதபதி தெரிவித்தார். 

மேலும் வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை