February 24, 2019 Sunday 10.32 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 29 2019 5:48 PM

அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கு: மார்ச் 28 இல் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted Date : Jan 29 2019 5:48 PM

  அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் இயக்கம் தொடுத்த ஊழல் வழக்கில் மார்ச் 28 இல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கோவை மற்றும் சென்னையில் சாலைப் பணிகளுக்கான டெண்டரை தனது உறவினர்களின் நிறுவனங்களுக்கு வழங்கி முறைகேடு செய்ததாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மனுத்தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் கோயம்புத்தூர் மற்றும் சென்னை மாநகராட்சியில் சாலைகள் அமைக்கும் பணியில் டெண்டர்கள் முறையாக விடப்படவில்லை. வெளிப்படையான டெண்டர் நடவடிக்கைகள் நடத்தப்படவில்லை. குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே, குறிப்பாக 2 பேர் மட்டுமே டெண்டர்களில் பங்குபெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணியின் நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளின் பெரும்பாலான டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதுகுறித்து கடந்த செப்டம்பர் 12ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்தோம். புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் புகார் மீது தமிழக தலைமை செயலாளர் ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற்று லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 

இதே போல் உள்ளாட்சி துறையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கோவையில் பல்வேறு திட்டங்களுக்கு தனது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சொந்தமான கேசிபி இன்ஜினியரிங் லிமிடெட், செந்தில் அன் கோ, வரதன் இன்பிரா, கான்ஸ்ட்ரானிக்ஸ் இண்டியா, ஆலயம் பவுண்டேசன் லிமிடெட், கான்ஸ்ட்ராமால் குட்ஸ் லிமிடெட், இன்விக்டா மெடிடெக் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுத் துறை விசாரிக்கவும், கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளது. 

இரு வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆரம்ப கட்ட விசாரணைக்கு பொதுத்துறை செயலர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து விசாரணையை தொடரவும், ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையை மார்ச் 28 ஆம் தேதி தாக்கல் செய்யவும் நிவ்வ்திமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Suggest a
correction
View
Comments
Post
Comments