July 23, 2019 Tuesday 12.10 AM
Newsletter Home

சற்றுமுன்

நேர்மறை விமர்சனம் செய்ய பணம் கேட்டார்: ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் ஷக்தி சிதம்பரம் காவல் ஆணையரிடம் புகார்

Posted Date : Jan 29 2019 7:45 PM

கொலை மிரட்டல் விடுத்ததாக ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் ஷக்தி சிதம்பரம் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இணையதளவாசிகளுக்கு நன்கு அறிமுகமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் படத்தின் மீதான தனது விமர்சனத்தை யூடியூப் தளத்தில் பதிவிடுவார். இவரது விமர்சனத்தை லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். 8.15 லட்சம் பார்வையாளர்களை கொண்டது இவரது யூடியூப் தளம் என்பதால், அவரது விமர்சனம் படத்தின் மீது தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எளிமையான மொழியில் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது இவரது பாணி.

இந்நிலையில் தற்போது பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தை மோசமாக விமர்சித்ததாக கூறி ப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில், "ஷக்தி சிதம்பரமாகிய நான் 25 ஆண்டுகளாக பல்வேறு வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் தமிழ்த்துறையில் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறேன். என்னுடய இயக்கத்தில் கடந்த 26-ம் தேதி வெளியான சார்லி சாப்ளின் படத்தை மிகக் தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்துள்ளார்.

பிளு சட்டை மாறனிடம் அலைபேசியில், ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை உள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர் உட்பட படத்தின் ஒட்டு மொத்த குழுவையும் ஒருமையில் கேவலமாக பேசியதையும் கடும் சொற்களை உபயோகப்படுத்தியதையும் வாபஸ் பெற வேண்டும் என்று நாகரிகமாக கேட்டேன். ஆனால் அவர் இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறேன். எனக்கு லாபம் கிடைக்க என்ன வேணும்னாலும் பண்ணுவேன் உன்னால் முடிஞ்சா பாத்துக்கோ என மோசமான வார்த்தைகளில் பேசினார். மேலும் என்னை காலிபண்ணிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

அவருடைய தமிழ் டாக்கீஸை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது புகாரில் ஷக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை