February 24, 2019 Sunday 10.34 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 8 2019 4:55 PM

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன் மனு மீது விசாரணை ஒத்திவைப்பு 

Posted Date : Feb 8 2019 4:55 PM

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார்.

மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..

இதை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Suggest a
correction
View
Comments
Post
Comments