May 24, 2019 Friday 09.09 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 2 2019 8:22 PM

ஒப்பந்தத்தை மீறி எஃப்-16 விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியதா? - விசாரிக்க அமெரிக்கா முடிவு 

Posted Date : Mar 2 2019 8:22 PM

தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கிய எஃப்-16 விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுபற்றி விசாரணை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கடந்த 27-ம் தேதி பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் காஷ்மீரின் ரஜவுரி பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயன்றன. அந்த விமானங்களை இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த வான்வெளி சண்டையின் போது பாகிஸ்தான் போர் விமானங்களை அவர்களின் எல்லைக்கே சென்று இந்திய போர் விமானங்கள் விரட்டின. இந்திய விமானி அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை விரட்டிச் சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு பாகிஸ்தான் போர் விமானத்தின் ஏவுகணை, அபிநந்தனின் விமானத்தை தாக்கியது. பாராசூட் உதவியுடன் அவர் உயிர் தப்பினார். ஆனால் அவர் பாகிஸ்தானில் தரையிறங்கியதால், பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. சர்வதேச நாடுகளின் நெருக்கடி மற்றும் இந்திய அரசின் நடவடிக்கைகளால் அபிநந்தனை நேற்று பாகிஸ்தான் இந்தியாவிடம்  மீண்டும் ஒப்படைத்தது.

இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எஃப்-16 விமானங்கள். இந்த விமானங்களை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இதற்கான ஒப்பந்தத்திலும் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.

ஆனால் தற்போது அந்த விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை இந்திய விமானப்படை திரட்டியுள்ளது. 

ஆனால், இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு தாங்கள் எப்-16 விமானம் எதையும் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. 

இந்த புகாரையடுத்து பாகிஸ்தானின் விதிமீறல் குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை திரட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோன் பாக்னர் தெரிவித்துள்ளார். மேலும் இது உண்மை என்றால் விசாரணை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எஃப்-16 விமானங்களின் எலெக்ட்ரானிக் சிக்னல்கள் இந்திய விமானப் படை ரேடாரில் பதிவாகியுள்ளன. இந்த விவரங்கள் விரைவில் அமெரிக்கா வசம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை