August 23, 2019 Friday 07.00 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 13 2019 3:17 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்  மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை - ராகுல் காந்தி

Posted Date : Mar 13 2019 3:17 PM

 பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சமூக நல்லிணக்கமே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. நாட்டில் இப்போது பயங்கரவாதத்தைவிட வேலையின்மையை மக்கள் பெரிய பிரச்சினையாக கருதுகிறார்கள். பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அதிக வேலைவாய்ப்புகளை தரக்கூடிய சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான திட்டங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.  ஜிஎஸ்டி வரி சிக்கல்கள் எளிமையாக்கப்படும். 

காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளும் விவசாயமும் இல்லாத இந்தியா வலிமையாக இருக்காது என்பது காங்கிரசின் நம்பிக்கை. உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்சிப்போம்.

நான் ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். ஆனால், பிரதமர் மோடி சந்திக்கிறாரா?  நாக்பூரில் இருந்து நாட்டை ஆட்சி செய்ய நினைத்தால் இனி முடியாது. நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் எல்லாம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மோடி திணித்து வருகிறார்.

ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டால் அனில் அம்பானியும், பிரதமர் மோடியும் குற்றவாளிகள் ஆவார்கள். அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கிடைக்க, பிரதமர் தலையிட்டு பேசியுள்ளார். ரபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை பேசும்போது, பிரதமர் அலுவலகமும் பேசியது பிரச்சினை.

தமிழகம் தற்போது பிரதமர் மோடியால் இயக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீது தாக்குதல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்  மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. அவர்களை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இலங்கையில் நடந்த படுகொலையில் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பதாக யாரும் கருதவில்லை.

பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணிகளில் 33 சதவீத இடஒதுக்கீடு எனும் கொள்கையில் உறுதியாக உள்ளோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெறும். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

நீட் தேர்வால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியைப் பொருத்தவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சரியாக இருக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை