March 23, 2019 Saturday 08.51 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 13 2019 6:53 PM

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார் - ராகுல் காந்தி 

Posted Date : Mar 13 2019 6:53 PM

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, ஸ்டாலின், ஈஸ்வரன், வைகோ, பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியதாவது:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார் என்னும் நம்பிக்கையை உங்களுக்கு தெரிவித்து எனது பேச்சை தொடங்குகிறேன்.

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி இறந்துவிட்டாலும் நம்முடன் இருக்கிறார். அவர் மறைந்து விடவில்லை. தமிழ் மக்களின் உணர்வுகளில், தமிழக வரலாற்றில், தமிழகத்தின் வளர்ச்சியில் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இங்கு நடைபெறும் அரசை டெல்லியில் இருந்து பிரதமர் மோடியின் அலுவலகம் கைப்பாவையாக ஆட்டிவைத்து இயக்கிக் கொண்டிருக்கிறது.

பொய் சொல்வதில் வல்லவரான பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அளித்த வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் உள்பட எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. தனக்கு வேண்டப்பட்ட பெரு முதலாளிகள் வாழ்க்கை வளம் பெறுவதற்காக அவர் தனது பதவியை பயன்படுத்துகிறார்.

ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நான் இந்த நாட்டின் காவல்காரன் என்று முழங்கிய மோடி, இந்த நாட்டு மக்களிடம் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயை பறித்து தனது நண்பர் அனில் அம்பானி கையில் கொடுத்து விட்டார்.

ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி இணைக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் முன்னாள் பிரதமரிடம் மோடி நேரிடையாகவே பேரம் பேசி இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வைத்தார்.

திருவள்ளுவர் கூறியதுபோல் உண்மை வெல்லும். அப்படி, உண்மை வெல்லும்போது ரபேல் விவகாரத்தில் செய்த ஊழலுக்காக மோடி சிறையில் அடைக்கப்படுவார்.

நாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம்? என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். மக்கள் இன்று வேலையில்லா திண்டாட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல தொழில்கள் நொடிந்துபோய் கிடக்கின்றன. அடுத்த அடியாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் அவர்கள் சுரண்டப்படுகின்றனர். இதனால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, பணவீக்கமும் அதிகரித்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே வரி, குறைந்த வரி, எளிமையான வரி என்ற புதிய ஒற்றை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் தொழில்கள் தொடங்குவதற்கான அத்தனை வளங்களும் ஏராளமாக உள்ளன. இன்று பல கோடி மக்களிடம் உள்ள கைபேசிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என பொறிக்கப்பட்டுள்ளதுபோல், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்னும் நிலையை உருவாக்க தொழில் துறையை மேம்படுத்தி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவோம்.

தொழில் முனைவோருக்கு அதிகமான அளவில் வங்கிக்கடன்களை அளித்து வர்த்தகத்துறையில் சீனாவை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவை வளர்ச்சி அடைய வைப்போம். நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் குறைந்தபட்ச நிச்சயிக்கப்பட்ட வருமானத்தை உறுதிப்படுத்துவோம். இந்த திட்டம் உள்பட நிறைவேற்றப்படும் அனைத்து திட்டங்களின் பலனும் பயனாளிகளான மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.

தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய புயல்களால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் ஏக்கர் விளைபொருட்கள் நாசமடைந்தன. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை மோடி தலைமையிலான மத்திய அரசு இன்னும் அளிக்காமல் இருக்கிறது.

மேலும், மீன்பிடி தொழிலை நம்பி வாழும் தமிழக மீனவ மக்களுக்கும் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தழுவிய அளவில் மீனவர்களின் நலன்களை பாதுகாக்கவும், தேவையான உதவிகளை அளிக்கவும் மீனவர் நலனுக்கு என தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும்.

இங்குள்ள தாய்மார்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வாக்குறுதியை நான் இப்போது அளிக்க விரும்புகிறேன். பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். மத்திய அரசு துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவோம்.

கடைசியாக நான் ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் மோடியை மீண்டும் பிரதமராக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மோடி கையில் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம்.

மோடி தமிழ்நாட்டின் மீது மட்டும் தாக்குதல் நடத்தவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மொழி மற்றும் பண்பாட்டின் மீதும் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்படுகின்றன. இதற்கு இனிமேல் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்னும் உறுதிமொழியை அளித்து, இந்த கூட்டத்தில் உங்களை சந்தித்துப் பேசும் அரிய வாய்ப்பை அளித்ததற்கு நன்றிகூறி விடை பெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments