August 23, 2019 Friday 06.39 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 22 2019 5:26 PM

ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Posted Date : Mar 22 2019 5:26 PM

2016ம் ஆண்டு தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட  டாக்டர் பி.சரவணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். 

அதில், அ.தி.மு.க., வேட்பாளராக ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் வேட்பாளரை பரிந்துரைக்கும் தேர்தல் படிவத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வைத்த கைவிரல் ரேகை போலியானது. எனவே, ஏ.கே.போசின் வெற்றி செல்லாது என்று அறிவித்து தன்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து, ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக ஆய்வு செய்யவும், அதற்காக ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டபோது  எடுக்கப்பட்ட கைரேகையை பெங்களூர் சிறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஏ.கே.போஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கைரேகை தொடர்பான விசாரணைக்கு தடை விதித்தது. இந்நிலையில், ஏ.கே.போஸ் கடந்தாண்டு திடீரென மரணமடைந்தார். இதையடுத்து, சரவணன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி பி.வேல்முருகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.அதில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாராம் ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் வழக்கு தொடர்ந்த டாக்டர் சரவணன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி,  இந்த வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்க வேண்டும். இந்த வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலைத் தள்ளிவைத்துள்ளது என்று முறையிட்டார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி, வழக்கை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைப்பது தவறு. தேர்தலை நடத்தக்கூடாது என்று எந்த உத்தரவையும் இந்த நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்ததுடன் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டுமென்ற சரவணனின் கோரிக்கையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை