August 23, 2019 Friday 06.39 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 12 2019 11:45 AM

27 ஆண்டுகளுக்கு பின்பு சாதித்த இங்கிலாந்து: முதல்முறையாக அரையிறுதியில் தோற்ற ஆஸ்திரேலியா!

Posted Date : Jul 12 2019 11:45 AM

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பின்பு இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து -ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்ய  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், பின்ச் வந்தனர். ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்த கேப்டன் பின்ச், வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் பந்துவீச்சில் டக்-அவுட்டாகினார்.

அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்கவீரரான வார்னர் வோக்ஸ் பந்துவீச்சில் பேரிஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய க்வாஜாவிற்கு பதிலாக அணியில் இடம்பெற்ற ஹேண்டஸ்காம்ப் நெருக்கடியான சூழலில் விளையாடி வந்தார்.

பதற்றத்துடன் விளையாடிய ஹேண்டஸ்காம்ப் வோக்ஸ் பந்துவீச்சில் போல்ட்டாகி வெளியேறினார். ஆஸ்திரேலியா அணி 14 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. அவரை அடுத்து விக்கெட் கீப்பர் கேரி களமிறங்கி நிதானமாக ஆடி வந்தார்.

போட்டியின் 8வது ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை கேரி எதிர்கொண்டார். ஆக்ரேஷமாக ஆர்சர் வீசிய பந்தை கேரி தடுக்க முயன்ற போது அவரது தாடைப்பகுதியை பலமாக தாக்கியது. இதனால் காயமடைந்த கேரி பிளாஸ்திரி உடன் விளையாடி 46 ரன்களில் வெளியேறினார்.

ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க தனி வீரராக ஸ்மித் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பொறுப்புடன் ஆடிய ஸ்மித் 118 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ரன்அவுட்டானார்.

அபாரமாக பந்து வீசிய வோக்ஸ் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும், வுட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில்  223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜோசன் ராய், பேரிஸ்டோவ் களமிறங்கினார். ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி பின் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறவிட்டனர். 124 ரன்கள் எடுத்திருந்த போது பேரிஸ்டோவ் 34 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய ராய் 85 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து ராய் பேட்டில் உரசியது போன்று இருந்ததால் அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்பதால் ராய் நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். இங்கிலாந்து ரிவியூ வாய்ப்பை இழந்ததால் அவர் மைதானத்தை விட்டு விரக்தியில் வெளியேறினார்.

கேப்டன் மோர்கன் மற்றும் ரூட் அதிரடியை தொடர்ந்ததால் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைவது இதுவே முதன்முறையாகும்.

ஆஸ்திரேலியாவை தோற்கடித்த வரலாற்று சாதனையுடன் இங்கிலாந்து அணி வரும் 14ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை