February 22, 2020 Saturday 12.29 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 24 2019 8:25 PM

சிலை கடத்தலில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு - பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

Posted Date : Jul 24 2019 8:25 PM

சிலை கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்புள்ளதாக பொன்.மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் பணி ஒய்வு பெறவிருந்த நாளன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் ஓராண்டு பதவி நீட்டிப்பு பெற்றார். 

இதனையடுத்து சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தீவிரமாக விசாரித்து வருகிறார். அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும், தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி பொன்.மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பொன்.மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய பொன்.மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இரு அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக பொன்.மாணிக்கவேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை