January 25, 2020 Saturday 02.20 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 25 2019 7:08 PM

சிலை கடத்தலில் எங்களுக்கு எந்த தொடர்புமில்லை - அமைச்சர்கள் கூட்டு பேட்டி!

Posted Date : Jul 25 2019 7:08 PM

சிலை கடத்தலில் எங்களுக்கு எந்த தொடர்புமில்லை என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக தன்னை அவருடன் கூட்டுச் சேர்த்து கைது செய்திருப்பதாகவும், எனவே பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமெனக் கோரியும் முன்னாள் டிஎஸ்பி காதர் பாஷா தொடர்ந்த வழக்கில் விசாரணை  நடைபெற்றது. 

அப்போது விசாரணையின் போது  சிலைக் கடத்தலில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக பொன்.மாணிக்கவேல் தரப்பு தகவல் அளித்திருந்தது. அமைச்சர்களுக்கு தொடர்பிருந்தால் ஆதாரத்துடன் தெரிவியுங்கள் என்று கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிசவாசன் கூறியதாவது:

எனது பெயரையும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெயரையும் குறிப்பிட்டு செய்தி வந்திருக்கிறது. யாருக்கு தொடர்பு என்று பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும். ஆனால் அந்த தனியார் தொலைக்காட்சி எப்படி எங்களுக்கு அதில் தொடர்புள்ளது என செய்தி வெளியிடலாம். அந்த தொலைக்காட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்றார்.

அதையடுத்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது:

இன்று காலை குறிப்பிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி சிலைக் கடத்தலில் எங்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக தவறான செய்தியை  புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. என்னையும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், இந்த ஆட்சியையும் வேண்டுமென்றே கலங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி மீது புகார் கொடுத்துள்ளோம், பிரெஸ் கவுன்சிலிலும் புகார் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

வரும் 2 ஆம் தேதி இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போதுதான் யார் யார் அந்த அமைவச்சர்கள் என்பது குறித்து தெரியவர வாய்ப்புள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை