October 22, 2019 Tuesday 07.46 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Aug 23 2019 11:20 AM

பற்றி எரியும் அமேசான் காடுகள் - பேராபத்து என ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Posted Date : Aug 23 2019 11:20 AM

தொடர்ந்து பற்றி எரியும் அமேசான் காடுகளால் பருவநிலை மாற்றம் ஏற்படகூட வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களாக அமேசான் மழைக்காடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் சாம்பலாகிவிட்டன. பிரேசில் நாட்டின் ஆராய்ச்சி மையம் (INPE) இந்த வாரத்தில் இதுவரை உருவான காட்டுத்தீயின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 80 சதவிகிதம் அதிகம் என்கிறது. இதனால், உலகிலேயே அமேசான் காட்டிற்கு மட்டுமே சொந்தமான பல தனித்துவமிக்கச் சூழலியல் பகுதிகள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.

அமேசான் மழைக்காடுகள், கோடைக்காலத்தில்கூட அவ்வளவு எளிதில் தீ பற்றக்கூடியதல்ல. கலிபோர்னியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளிலுள்ள வறண்ட காடுகளைப் போல் இவை இல்லை. அதிகபட்சம் அடர்த்தியான ஈரப்பதம் மிக்கக் காடுகளைக் கொண்டது. அங்குக் காட்டுத்தீ ஏற்படக் காரணம் மனிதர்களே என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

ஈக்வடார் நாட்டில் இருக்கும் அமேசான் காட்டில் வாழும் வாவொரணி என்ற பழங்குடியின மக்கள் அந்த காட்டை சார்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த மே மாதம் ஏழு மில்லியன் ஏக்கர் வனப்பகுதியை ஆக்கிரமித்து எண்ணெய் எடுக்க திட்டமிருந்த நிறுவனத்திற்கு எதிராக போராடி தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தார்கள். அந்த நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு சாதகமாக வரவிருந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் வெற்றி கண்டனர். அது நடந்த சில நாட்களிலேயே அமேசான் காடு முழுக்க காட்டு தீ ஏற்பட்டிருப்பதையும் அது மனிதர்களால் ஏற்பட்டதுதான் என்று வானியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுவதையும் எதேச்சையாக நடந்ததென்று கடந்து போக முடியாது என்று சூழலியல் ஆர்வலர்கள் சந்தேகிக்கிறனனர். 

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோதான் காரணமென்று பிரேசிலைச் சேர்ந்த சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பொல்சானாரோ அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அமேசான் காட்டைப் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவர் சொல்லியதைப் போலவே பண்ணையாளர்கள், விவசாயிகள், இயற்கை வள நிறுவனங்களைக் காடுகளைப் பயன்படுத்திக்கொள்ள விடப்போவதாகவும் அதற்காகவே மழைக்காட்டில் காட்டுத்தீ ஏற்படுத்தி அதன் பெரும் பகுதியை அழிக்கத் திட்டமிட்டு இதைச் செய்துள்ளதாகவும் அவர்மீது பிரேசிலைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு பெருவிவசாயிகளை, ஆக்கிரமிப்பாளர்களை, நிறுவனங்களை அமேசானை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது. அங்கு உருவாகியிருக்கும் அரசும் அதைத்தான் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் உலகின் நுரையீரலை விற்பனைப் பொருளாக்கி அதன்மூலம் லாபம் பார்க்கமுடியும். அப்போதுதான் அந்த நிலத்தைப் பண்ணையாளர்களுக்குக் கூறுபோட்டு விற்றுத் தீர்க்கமுடியும். அப்போதுதான் நிறுவனங்கள் இயற்கை வளங்களைத் திருட வழி செய்துகொடுக்க முடியும். மழைக்காடுகளைத் திருடும் மாஃபியா கும்பலிடம் அமேசானைச் சிக்கவைத்துச் சீரழிக்க முடியும்.

ஒரு காடு அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் நாடும் அழியும். ஆனால், அமேசான் அழிந்தால் அது உலக அழிவையே விரைவுபடுத்திவிடும். ஏனென்றால், அது வெறும் மழைக்காடு மட்டுமல்ல; அதுதான் உலகின் நுரையீரல். அதிகபட்ச பிராண வாயுவை வாரிக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளல். இன்று பிரேசில், ஈக்வடார் போன்ற அரசுகள் செய்துள்ள செயல் நமக்குப் பாதுகாவலனாக இருந்த காட்டைச் சீரழிக்கிறது. அதிலிருந்தே நம்மை அழிக்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் கரிம வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகப்படுத்தப் போகிறார்கள். 

நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்குக் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நம்மிடமிருக்கும் ஓர் ஆயுதம்தான் அமேசான். இப்போது அமேசானைக் காப்பாற்றுவதால் நாம் அதை மட்டும் பாதுகாக்கப் போவதில்லை, அதன்மூலம் நமக்கு நிகழவிருக்கும் பேரழிவிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை