February 22, 2020 Saturday 11.29 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 27 2019 10:18 AM

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: உதித் சூர்யா மற்றும் அவரது தந்தைக்கு 15 நாட்கள் சிறை!

Posted Date : Sep 27 2019 10:18 AM

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா சேர்ந்தது தெரியவந்தது. இவ்வழக்கை அண்மையில் டிஜிபி திரிபாதி, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டார். உதித் சூர்யாவுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் தேனி அழைத்துச் சென்றனர். நேற்று மாணவர் மற்றும் அவரது தந்தையிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

அப்போது மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் இப்படிச் செய்து விட்டேன் என்றும் ,நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தால் இவ்வளவு பின்விளைவுகள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சிபிசிஐடி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர்மீது குற்றவாளியைத் தப்பிக்க விடுதல், குற்றவாளிக்கு இடம் கொடுத்தல், கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர். இந்த குற்றத்திற்கும் மாணவரின் தாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் உதித் சூர்யாவின் பெயரில் தேர்வு எழுதியது யார்? அந்த மாணவர் எங்கு உள்ளார்? ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவியது யார்? என்பது குறித்தும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.

இதில் சில இடைத்தரகர்கள் இருந்ததும், மாணவர் பயின்ற தேர்வு மையத்திற்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனைத் தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை