November 12, 2019 Tuesday 04.18 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 4 2019 7:28 PM

முடிந்தது ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை - முடிவுகள் எப்போது?

Posted Date : Oct 4 2019 7:28 PM

ராதாபுரம் தொகுதிக்கான மறுவாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் முடிவுகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ராதாபுரம் தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் அப்பாவு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் 203 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. எனவே, 19, 20, 21ம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களின் கன்ட்ரோல் யூனிட்டுகளையும், எண்ணப்படாத 203 தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும். இதற்காக 3 சுற்று வாக்கு இயந்திரங்களையும், 203 தபால் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி இன்பதுரை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், தபால் வாக்குகளை இன்று காலை 11 மணிக்கு எண்ணத்தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ராதாபுரம் தொகுதிக்கான வாக்குகள் எண்ணிக்கை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தொடங்கியது. மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் ராதாபுரம் எம்எல்ஏ இன்பத்துரை, சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திர பட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘ஐகோர்ட் உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நடத்தலாம். ஆனால் முடிவுகளை வருகிற 23ம் தேதி வரை வெளியிட தடை விதிக்கப்படுகிறது’’ என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதனால் வரும் 23 ஆம் தேதி வரை முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. வரும் 23 ஆம் தேதி அன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது முடிவுகளை அறிவிக்க தடையில்லை என்று நீதிமன்றம் கூறினால் தமிழக இடைத்தேர்தல் முடிவுகளோடு ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. 

முடிவுகள் அறிவிக்கப்பட்டால் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெறவே வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. செல்லாததாக அறிவிக்கப்பட்ட தபால் வாக்குகளில் பெரும்பாலானவை திமுகவிற்கே விழுந்திருக்கும் என்று அடித்துக்கூறும் திமுகவினர் திமுகவே வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இதன் தாக்கம் இடைத்தேர்தலில் எதிரொலித்திருக்கும் என்று அச்சத்திலிருந்த அதிமுகவினரும், முடிவு அறிவிக்க இடைக்கால தடை விதித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை