November 12, 2019 Tuesday 04.57 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 5 2019 4:37 PM

கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா? - பிரதமர் மோடி மீது பிரகாஷ் ராஜ் தாக்கு!

Posted Date : Oct 5 2019 4:37 PM

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்தது பற்றி நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் விமர்சித்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த 49 திரைப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். இக்கடிதத்தில் இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா, கொங்கனா சென் சர்மா உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்தக் கடிதம் எழுதியதன் மூலம், பிரதமரின் மரியாதையை குறைக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா அளித்த புகாரின் பேரில், கடிதம் எழுதிய 49 பேர் மீதும் பிகார் மாநிலம் சகர் காவல் நிலையத்தில் 124 ஏ பிரிவின் கீழ் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரகாஷ் ராஜ், “மோடி இந்த நாட்டின் பிரதமர். அவருக்குக் கடிதம் எழுதியதற்காக தேச துரோக வழக்கு என்பது ஏற்க முடியாதது. மோடி தான் ஒரு நாட்டின் தலைவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு முறை நாட்டின் பிரதமராகியிருக்கும் மோடி தான் ஒரு கட்சியின் தலைவர் போல நடந்துகொள்ளக் கூடாது. இரு தரப்புக் கருத்துகளுக்கும் அவர் காதுகொடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நாட்டில் குறிப்பிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஒருகடிதம் எழுதுவதற்காக தேச துரோக வழக்கு என்றால், இனிமேல் யாரும் கேள்வி கேட்க எப்படி வருவார்கள்? ” என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் வெற்றிமாறன் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், “கும்பல் படுகொலை என்ற அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது பண்பட்ட, நாகரிகமான வழிமுறையாகும். இதற்கு எதிராக இப்படி ஒரு நடவடிக்கை என்ற நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை