December 13, 2019 Friday 03.12 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 9 2019 12:17 PM

தாய்லாந்து நீர் வீழ்ச்சியில் 5 யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சி - 11 யானைகள் உயிரிழந்தது கண்டுபிடிப்பு!

Posted Date : Oct 9 2019 12:17 PM

தாய்லாந்து நாட்டில் நீர் வீழ்ச்சியில் சிக்கிய குட்டி யானையைக் காப்பாற்ற முயன்ற ஐந்து யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் விசாரணையின்போது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் `காஹோ யாய்’ என்ற தேசிய பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு யானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. இந்தப் பூங்காவுக்குள் ஹயூ நரோக் என்ற நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் யானைகளின் சத்தம் கேட்டுள்ளது. பின்னர் காலை 6 மணி அளவில் அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது, 3 வயதுள்ள யானைக்குட்டி ஒன்று நீர்வீழ்ச்சிக்குக் கீழே மூழ்கிக் கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஊழியர்கள் நீர்வீழ்ச்சியைச் சுற்றிப் பார்த்தபோது, அங்கு மேலும் 5 யானைகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், `முதலில் 3 வயதுடைய குட்டியானை நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்துள்ளது. இதையடுத்து அந்த யானையைக் காப்பாற்ற மேலும் சில யானைகள் முயற்சி எடுத்திருக்கலாம். அப்போது, அந்த யானைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம்’ என்று தெரிவித்தனர்

இந்தத் தகவல்கள் புகைப்படங்களுடன் வெளியாக, அதைப் பார்த்தவர்கள் கலங்கிப்போயினர். ஒரே நேரத்தில் இத்தனை யானைகள் பலியான விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. 

யானைகள் மரணம் தொடர்பாக முழுமையான தகவல்கள் பெற நீர் வீழ்ச்சி பகுதியில் ட்ரோன் பறக்கவிடப்பட்டது. அப்போது தாய்லாந்து வனத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குட்டியானையுடன் சேர்த்து மொத்தம் ஆறு யானைகள் பலியானதாகக் கூறப்பட்ட நிலையில் மேலும் 5 யானைகள் உடல் நீர்வீழ்ச்சிக்குக் கீழே கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒரே நாளில் அந்தப் பூங்காவில் 11 யானைகள் பலியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய பூங்காவின் இயக்குநர் கன்சிட் ஸ்ரீநோப்பவான், ``கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழைக்குப் பின்னர், யானைகள் கூட்டம் இந்த நிர்வீழ்ச்சி பகுதியைக் கடந்துள்ளது. அப்போது 3 வயதுள்ள யானை தவறி விழுந்துள்ளது. உடனடியாக மற்ற யானைகள் குட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளன. அனைத்து யானைகளும் ஒரே நேரத்தில் பலியானது மாதிரி தெரிகிறது. இந்தக் கோர சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. சனிக்கிழமை அதிகாலையில் கேட்ட யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது எல்லாமே முடிந்துவிட்டது” என்றார்.

இந்தச் சம்பவத்தில் பாறைகளின் ஓரத்தில் வலிமையில்லாமல் இருந்த இரண்டு யானைகள் வனத்துறை அதிகாரிகள் மூலம் காப்பாற்றப்பட்டன. முன்னதாக அவற்றின் உடல் வலிமையை அதிகரிக்க உணவுப் பொருள்கள் தூரத்தில் இருந்து யானைகள் இருக்கும் பக்கம் வீசப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட இரண்டு யானைகளுக்கும் பூங்காவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பூங்காவில் சுமார் 300 யானைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நீர்வீழ்ச்சியில் 8 யானைகள் விழுந்து ஒரே நேரத்தில் பலியாகியிருக்கின்றன. இந்த முறை 11 யானைகள் பலியாகியுள்ளது உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை