August 02, 2021 Monday 05.47 PM
Newsletter Home

சற்றுமுன்

மருத்துவர்.சுகுந்தன்
Posted Date : Oct 13 2018 6:44 AM

கருவேப்பிலையின் மருத்துவம்

Posted Date : Oct 13 2018 6:44 AM

மக்கள் நோயின்றி வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது நாம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் உணவு பழக்கவழக்கங்களாகும். முறையான அறுசுவையோடு கூடிய உணவானது நம்மை திடமுடன் வைத்திருப்பதோடு எதிர்ப்பு சக்தியை பெருக்கி நோயிலிருந்து காத்து ஆரோக்கியத்துடன் உடலை வலுப்படுத்துகின்றது.

நமது முன்னோர்கள் முதற்பொருளாகிய பொழுதினை சிறுபொழுது, பெரும்பொழுது  என இரண்டாகப் பிரித்து அதற்கேற்றார் போல் உணவு முறைகளை, வாழ்வியல் நெறிமுறைகளை பாகுபடுத்தியுள்ளனர். இங்கனம் கூறப்பட்டுள்ள தமிழர்தம்  பாரம்பரிய வழக்குமுறைகளையும், உணவு பொருட்களையும் பற்றின சித்தர் பெருமக்களின் கருத்துக்களை இனி வரும் இதழில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

                                             முதலாவதாக நமது உணவில் தினசரி இடம்பெற்றுள்ள கருவேப்பிலை பற்றி பார்க்கலாம்.கொத்தான மாற்றடுக்கில் அமைந்த நறுமணமிக்க இலைகளையும், மலர்களையும், கருநிற பழங்களையும் கொண்ட சிறுமரமாகும். இதனை கறிவேப்பிலை, கருவேம்பு, கறியபிலை என்று வேறு பெயர்களில் அழைப்பதுண்டு. இதன் இலைகளை  தமிழர்கள் வாழ்வில் அன்றாடம் செய்யக்கூடிய  கறிவகைகளில், குழம்பு, துவையல், நீர்மோர் போன்றவற்றில் சேர்த்து   உண்பது வழக்கம்.   
  
                                             மேலும் தற்கால நவீன விஞ்ஞான ஆய்வில் இதற்கு Anti - diabetic, Anti - oridant, Hepto - protective போன்ற மருத்துவகுணங்கள்  இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இது கனையத்தினை  நேரடியாக தூண்டி வலுப்பெற வைப்பதாகவும், ஈரலுக்கு வன்மை தருவதாகவும் அறியப்பட்டுள்ளது. இதில் Iron, Zinc, Copper, Nicotinc acid, Vitamin A and C போன்ற சத்துக்கள் மிகுதியாக காணப்படுகிறது.

இதனைப்பற்றி அகத்தியர் தமது குணவாகத்துடன் பின்வருமாறு கூறியுள்ளார்,

                           " வாயினருசி வயிற்றுளைச்ச னீடுசுரம்
                             பாயுகின்ற பித்தமென்பண்ணுங்  தூய
                             மருவேறு காந்தயுங்கை மாதே
                             உலகிற் கருவேப்பிலை  யருந்திகாண். "

               பொருள் : 
           
                                  கருவேப்பிலையை உண்டுவர வாயில் தோன்றும் சுவையின்மை, வயிற்று உளைச்சல், ஈடுசுரம், அதிகமான பித்தம், போன்றன நீங்கும் என்கிறார்.


                      " வாய்க்கு ருசியுண்டாம்  வயிற்றிரைச்சல் பேதியுபோம்
                        தீக்கனலால் கொள்ளும் புண்ணானதும்  அரோசியகமும்
                        பயித்தியங்கள் மாற்றுங்காண் பெண்ணே மாவுலகில்
                        தொற்றுங் கறிவேப்பிலையை  போற்று."

              பொருள் : 
            
                                 மேலும் இதுவும் வாய்க்கு ருசியுண்டாக்கி,வயிற்று இரைச்சல், பேதி, அதிக சூட்டினால் உண்டான புண், சுவையின்மை, பயித்தியங்கள் ஆயின நீங்கும்.  


                         போகன் எனும் சித்தர் இதனை கற்பமுறையாக தொடர்ந்து 48 நாட்கள் உப்பு, புளி நீக்கி காலை மாலையென  இருபொழுது உண்டுவர வெளுத்துப்போன உடல் கருநிறம் பெற்று, இருட்டறையில் இருந்தாலும்  உடல் இளஞ்சூரியன் போல் பொலிவும் பெறும் என்று ரத்தம் ஊறி ஒளியுடன் இருப்பதற்கு உவமையாக  தனது 7000 எனும் நூலில் கூறுகிறார்.

நாட்டு வழக்குமுறைகள்,

             1 . கறிவேப்பிலை 15 முதல் 20 எடுத்துக்கொண்டு இத்துடன் 1 மிளகு சேர்த்து நெய்யில் வதக்கிய பின் வெந்நீர்விட்டு நன்கு அரைக்கவும். இதனை தண்ணீரில் கலந்து குழந்தைகளை குளிப்பாட்டியவுடன் குடிக்க செய்ய வயிறு மந்தம் நீங்கி பசியை உண்டு பண்ணும்.

             2 . இதன் இலையுடன் சுட்டபுளி சிறிது, வறுத்த உப்பு, தேவையானளவு, வறுத்த மிளகாய் ஒன்று கூட்டி அரைத்து துவையல் போல் செய்து உணவுடன் சேர்த்து உண்டுவர சுவையின்மை, ,  செரியாமை, வயிறு உளைச்சல், பித்தவாந்தி முதலியன குணமாகும்.

            3 . கருவேப்பிலை ஈர்க்குடன், நெல்லி ஈர்க்கு செத்து இடித்து நீர் வீட்டுக்காய்ச்சி வாந்தியானது உடனே நிற்கும்.

            4 .  கருவேப்பிலை ஈர்க்குடன், முருங்கையீர்க்கு  ஒரு கைப்பிடியளவு போட்டு நீர் வீட்டுக்காய்ச்சி சிறிது பனங்கருப்பட்டி சேர்த்து கருவுற்ற தாய்க்கு hemoglobin குறைபாட்டுக்கு கொடுப்பது கன்னியாகுமரி மாவட்ட வழக்குமுறையாகும்.இது அனுபவத்தில் மிகவும் பயன்தருவதாக இருந்துள்ளது.

           5 . ஒருபிடி இலையுடன் சிறிது சீரகம், சிறிது மஞ்சள் சேர்த்து  அரைத்து நெல்லிக்காயளவு வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர பித்தமிகுதியால் வரும் பிதற்றல் பைத்தியம் தீரும்.
                                               
            6 . கருவேப்பிலை உலர்த்தியது ஒரு 100 கிராம் எடுத்துக்கொண்டு அத்துடன்  தோல்சீவின சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, ஓமம், பெருங்காயம், இந்துப்பு  போன்றன வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு இயும்வறுப்பாக வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். பிறகு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். இதனை அன்னப்பொடி என்பர். தினமும்  10 கிராம் அளவு உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர நெஞ்சு எரிச்சசல், புளியேப்பம், மந்தம், செரியாமை, வாந்தி ஆகியன நீங்கி சுகம் ஏற்படும்.      

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை