September 28, 2021 Tuesday 10.45 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 25 2019 6:52 AM

துருப்பிடித்த தங்கப் பதக்கம்

Posted Date : Dec 25 2019 6:52 AM

துருப்பிடித்த தங்கப் பதக்கம்
...........
பட்டமளிப்பு விழா மண்பத்திற்கு வெளியே
முக்காடிட்ட மாணவி ஒருத்தி
தனியாக நின்றுகொண்டிருக்கிறாள்
அவளிடம் அடையாள அட்டை இருந்தது
அங்கு வருவதற்கான அனுமதி இருந்தது
அவள் பெறுவதற்கு பட்டம் இருந்தது
அவள் சூடுவதற்கு ஒரு தங்கப்பதக்கம் இருந்தது
ஆயினும் அவள் நுழைவாயிலிலேயே
நிறுத்தப்பட்டிருக்கிறாள்
ஏனெனில் அவளிடம்
அனுமதிக்க முடியாத
வேறொரு அடையாளம் இருந்தது
அது வெளியேற்றத்திற்கான அடையாளம்

அவள் முக்காடிட்ட
ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியாக இருக்கக்கூடும்
அவள் முக்காடிட்ட
ஒரு அர்பன் நக்சலாக இருக்கக் கூடும்
அவள் தவறாக வழிநடத்தப்பட்ட
ஒரு கலகக்கார மாணவியாக இருக்கக்கூடும்
அவள் நாட்டின் குடிமகன் முன்னால்
நீதிக்கான கோஷம் ஒன்றை எழுப்பக்கூடும்
முக்காடிடாதவர்களும் இதையெல்லாம்
செய்யக்கூடும் என்றாலும்
முக்காடிட்டவர்கள் அதிக ஆபத்தானவர்கள்
அவள் வெளியே நிறுத்தப்பட்டிருக்கிறாள்
பரிசளிப்பு விழா மண்டபத்திற்கு வெளியே
நீதிக்கு வெளியே
தேசத்தின் எல்லைக்கு வெளியே
சிறு வயதில் வகுப்பறையில் தான் பேசியதற்காக
வெளியே நிறுத்தப்பட்ட காட்சி
அவளுக்கு நினைவுக்கு வந்தது
கண்ணீருடன் புன்னகைத்தாள்

நாட்டின் முதல் குடிமகன்
கடைசிக் குடிமகன்களிடமிருந்தோ
கடைசிக் குடிமகள்களிடமிருந்தோ
எந்த அச்சுறுத்தலும் இன்றி
பட்டங்களையும் பதக்கங்களையும்
வழங்கிக்கொண்டிருந்தார்
சிறு அசம்பாவிதங்களுக்கும்
வாய்ப்பளிக்காத ஒரு புனிதச் சடங்காக
அது நிகழ்ந்துகொண்டிருந்தது.
கவுனும் தலைப்பாகையும் அணிந்த காவலர்கள்
பட்டம் பெறவந்த மாணவர்களுடன்
கலந்து அமர்ந்திருந்தனர்
அந்த மாறுவேடப்போட்டி
மிகச்சிறந்த கலை நிகழ்ச்சியாக இருந்தது
பட்டம் பெறவந்த ஒரு மாணவி
நீண்ட நேரமாக வெளியே நின்றுகொண்டிருந்தாள்

முதல் குடிமன்கள் கண்ணில்
முக்காடிட்டவர்கள் படுவது அமங்கலமானது
அது ஆபத்தானதும்கூட
முதல் குடிமகன் மேடையைவிட்டு இறங்கிப்போகிறார்
மண்டபத்தைவிட்டு வெளியேறிச் செல்கிறார்
முக்காடிட்ட மாணவியினால் நிகழக்கூடிய
அபாயத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்கிறார்

முக்காடிட்ட மாணவிக்கு
இப்போது கதவு திறக்கப்படுகிறது
முதல் குடிமகனுக்குப் பதில்
இரண்டாம் மூன்றாம் குடிமன்கள்
கடைசிக்குடிமளுக்கு
பட்டளிக்க அழைக்கின்றனர்

முக்காடணிந்த கடைசிக் குடிமகள்
தனக்களிக்கப்பட்ட தங்கப் பதத்தை
உற்றுப்பார்க்கிறாள்
அதை அடைவதற்கு
அவள் நீண்ட தூக்கமற்ற இரவுகளை
கடந்துவந்திருந்தாள்
அது அவள் வாழ்வில் அதுவே முதல் பதக்கம்
அதுவே முதல் வெற்றி
அது இப்போது
ஒரு அவமானச்சின்னமாக
அவள் நெஞ்சில் கனக்கத் தொடங்கியது
அதன் பொன்னிறம் எதிர்ப்பின் கனலாக
அவள் நெஞ்சில் எரியத் தொடங்கியது
அதன் வாசகங்கள்
புறக்கணிப்பின் வாசகங்களாக
அவள் காதில் கேட்கத் தொடங்கியது
மண்டபத்திற்கு வெளியே
தெருக்களெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த
எதிர்ப்பின் குரலும்
அவள் காதில் கேட்டது
தான் யாராக இருக்க வேண்டும் என
அவள் உடனடியாக
ஒரு முடிவெடுக்க வேண்டியிருந்தது

தன் வெற்றிப் பதக்கத்தை
காற்றில் வீசி எறிகிறாள்
அவள் கை நடுங்கவில்லை
இரண்டு யோசனைகளில்லை
அது உதிர்ந்த ஒரு இலைபோல
மிதந்து செல்கிறது
முதல் குடிமகன் சென்ற பாதையிலேயே
அந்தப் பதக்கம்
ஒரு துருப்பிடித்த இரும்பாக உருண்டோடியது

இப்படித்தான் அவள்
இந்த ஆண்டில்
இந்த தேசத்தின் முதல் மாணவியாக
உருவாகி வந்தாள்
இப்படித்தான் ஒரு சிறுபெண்
இந்தக் காலத்தில்
தன் அடையாளங்களைப் பெறுகிறாள்

24.12.2019
காலை 9.32
மனுஷ்ய புத்திரன்

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை