January 25, 2020 Saturday 02.16 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 30 2019 6:07 PM

உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்

Posted Date : Dec 30 2019 6:07 PM

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் நடந்து முடிந்தது. இந்தப் போட்டி கடந்த டிசம்பர் 26-ல் இருந்து 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் மேக்னஸ் கார்ல்சன் பட்டம் வென்றார். 12 சுற்றுகள் கொண்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 8 வெற்றிகள் 7 டிரா உடன் எந்த ஒரு தோல்வியுமின்றி மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார்.
பெண்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 32 வயதாகும் இவர் 2016-ல் இருந்து 2018 வரை செஸ் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை.
குழந்தை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு ஆண்டுகள் செஸ் போட்டியிலிருந்து விலகி இருந்தார். இந்நிலையில் திரும்பி வந்த ஆண்டிலேயே உலக ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியர் இவர்தான்.
இரண்டு நாள் ஆட்டங்கள் முடிந்த நிலையில் கோனேரு ஹம்பி இரண்டாவது இடத்தை 6 புள்ளிகளுடன் நான்கு பேருடன் பகிர்ந்துகொண்டிருந்தார். முதலிடத்தை 6.5 புள்ளிகளுடன் சீன கிராண்ட் மாஸ்டர்கள் டான் ஜியோங்கி, லெய் டிங்ஜி, உக்ரைனைச் சேர்ந்த மரியா ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்தியாவைச் சேர்ந்த ஹம்பி சாம்பியன் ஆவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சீனாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள்தான் பட்டத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததார்கள். ஆனால், அற்புதமான அதிசயம் ஒன்று நடந்தது.
11 சுற்றுகள் முடிந்த நிலையில் லெய் டிங்ஜி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். டான் ஜியோங்கி 8.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம். ஹம்பி 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்தார். பன்னிரண்டாவது சுற்றில் ஹம்பியும் சீனாவைச் சேர்ந்த டான் ஜியோங்கியும் மோதினர். ஆட்டம் முடிவதற்கு சில நொடிகளே இருந்த நிலையில் டான் ஜியோங்கி டிரா செய்து கொள்ளலாம் என்று கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்தார் ஹம்பி. நேரமின்மை காரணத்தால் தவறான நகர்வைச் செய்தார் டான் ஜியோங்கி. இதனால் ஹம்பி 12-வது சுற்றில் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முன்னிலைக்குச் சென்றார்.

12-வது சுற்றில் ஆடிய லெய் டிங்ஜி போட்டியை டிரா செய்தாலே சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் அந்தப் போட்டியில் தோற்றுவிட்டார். இதனால் டை பிரேக் வந்தது. ஹம்பி சாம்பியன் ஆவதற்கு வாய்ப்பு கிடைத்தது. 12 சுற்றுகள் முடிவில் முதல் மூன்று இடங்களில் ஹம்பி, லெய் டங்ஜி இடம்பிடித்தனர். டை பிரேக்கர் சுற்றை சிறப்பாக விளையாடி இரண்டு இடங்களுக்குள் வந்தார். முதலிரண்டு இடத்தைப் பிடித்தவர்கள் சாம்பியன் பட்டத்துக்காக விளையாட வேண்டும். ஆர்மகேடன் என்ற கேம் விதிமுறைப்படி ஹம்பியும் லெய் டிங்ஜியும் விளையாடத் தொடங்கினர்.
ஆர்மகேடன் விதிப்படி வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடுபவர்களுக்கு ஐந்து நிமிடங்களும் கறுப்பு நிறக் காய்களுடன் விளையாடுபவர்களுக்கு நான்கு நிமிடங்களும் தரப்படும்.
அதில் வெள்ளை நிறக் காய்கள் உடையவர்கள் கட்டாயமாக வெற்றிபெறவேண்டும். கறுப்பு நிறக் காய்கள் உடையவர்கள் ஆட்டத்தை டிரா செய்தாலே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்தியாவைச் சேர்ந்த ஹம்பி கறுப்பு நிறக் காய்களுடன் விளையாடி ஆட்டத்தை டிரா செய்தார். இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
வெற்றி பெற்ற பிறகு ஹம்பி இவ்வாறு கூறினார். ``மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கும் போது நான் சாம்பியன் ஆவேன் என்று சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. முதல் மூன்று இடங்களுக்குள் வந்தாலே போதும் என்றிருந்தேன்.

டை பிரேக் கேம் விளையாடுவேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. டை பிரேக்கரின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தேன். இரண்டாவது ஆட்டத்தில் சிரமமான பொசிஷன்களில் நான் இருந்தபோதும் எப்படியோ வென்றுவிட்டேன். மூன்றாவது ஆட்டத்தை நல்ல பொசிசனுடன் கச்சிதமாக விளையாடி வெற்றி பெற்றேன்" என உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இந்த வெற்றி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த செஸ் ஆர்வலர்கள் ஹம்பிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஹம்பிக்கு இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை