January 29, 2020 Wednesday 12.52 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 8 2020 12:02 PM

நிர்பயாவை கற்பழித்து கொன்ற குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந் தேதி தூக்கு தண்டனை :மாணவிகள் கொண்டாட்டம்

Posted Date : Jan 8 2020 12:02 PM

இந்தியாவையே உலுக்கிய இந்த கற்பழிப்பு சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு ஓடும் பஸ்சில் நடைபெற்றது.

டெல்லியில் 23 வயதான துணை மருத்துவ மாணவி ஒருவர் அன்று இரவு சினிமா பார்த்துவிட்டு இருப்பிடத்துக்கு திரும்புவதற்காக தனது நண்பருடன் ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் சொகுசு பஸ் அங்கு நின்றது. அதில் இருந்த ஊழியர்கள் தங்கள் பஸ்சில் ஏறும்படி கூறினர்.

இதனால் இருவரும் அந்த பஸ்சில் ஏறினர். இவர்களை தவிர்த்து டிரைவருடன் அந்த பஸ்சில் 6 பேர் இருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் பஸ் ஓடிக்கொண்டிருந்தபோதே அந்த மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தனர். இதை தடுக்க முயன்ற மாணவியின் நண்பரை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார்.

பின்னர் அந்த மாணவியை ஓடும் பஸ்சிலேயே அவர்கள் கற்பழித்தனர். வேறு ஒருவரை பஸ்சை ஓட்டும்படி கூறிவிட்டு டிரைவரும் அந்த மாணவியை கற்பழித்தார். பின்னர் மாணவியை கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி இருவரையும் பஸ்சில் இருந்து வெளியே வீசிவிட்டு சென்றனர்.

ரோட்டில் கிடந்த அவர்களை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இருவரையும் மீட்டு சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கற்பழிப்பு குற்ற வாளிகளை விரைவாக கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அந்த மாணவி உயர்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 13 நாட்கள் கழித்து டிசம்பர் 29-ந் தேதி அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு ‘நிர்பயா’ என்ற பொதுப்பெயர் சூட்டப்பட்டது.

டெல்லி போலீசார் பஸ் டிரைவர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு சிறார் குற்றவாளி ஆகிய 6 பேரை கைது செய்து கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் ராம்சிங் திகார் சிறையில் 2013-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நிர்பயா வழக்கை விரைவு கோர்ட்டு விசாரணை நடத்தி சிறார் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார்.

2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விரைவு கோர்ட்டு குற்றவாளிகள் முகேஷ், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை 2014-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டும், 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அக்ஷய் தாக்குர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை கடந்த டிசம்பர் 18-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் நிர்பயாவின் பெற்றோர் மற்றும் டெல்லி அரசு ஆகியோர் சார்பில் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

நீதிபதி ஏற்கனவே, 4 குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளார்களா? என்பதற்கு திகார் ஜெயில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது அரசு தரப்பில், இந்த வழக்கு தொடர்பான மனு எதுவும் எந்த கோர்ட்டிலோ அல்லது ஜனாதிபதியிடமோ இப்போது நிலுவையில் இல்லை. மறுஆய்வு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனவே குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதற்கிடையே குற்றவாளிகள் விரும்பினால் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று வாதாடப்பட்டது.

அதற்கு குற்றவாளிகள் முகேஷ், வினய் தரப்பு வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார் அரோரா, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் தாக்குர் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அவர்களை வருகிற 22-ந் தேதி காலை 7 மணிக்கு திகார் ஜெயிலில் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ‘கறுப்பு வாரண்ட்’ என்று அழைக்கும் வழக்கம் நீதித்துறையில் உள்ளது. ஆனாலும் குற்றவாளிகள் மேல்முறையீடு அல்லது கருணை மனு தாக்கல் செய்தால் இந்த உத்தரவை நிறுத்திவைக்கவோ அல்லது ரத்துசெய்யவோ வாய்ப்பு உள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை