August 02, 2021 Monday 04.45 PM
Newsletter Home

சற்றுமுன்

அருண் பிரபா
Posted Date : Oct 18 2018 10:48 AM

ஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை அது என்ன? - “பண்ணாங்குழி”

Posted Date : Oct 18 2018 10:48 AM

பல்லாங்குழி விளையாட்டு என்பது தமிழரின் மிகத் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறக்குறைய 8000 ஆண்டுகள் பழமையானது என்றால் அது மிகையாகாது. 

பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடும்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பல்லாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும்.

பல்லாங்குழி விளையாட்டு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளிலும் இந்தோநேசியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளிளும் பரவலாக விளையாடப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் தூய தமிழ்ச் சொற்கள் அல்லது சில வடமொழி  சொற்களுடன் ஆடப்படும் இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் தோன்றி பின்னர் தமிழர்கள் வணிகத்துக்காக சென்ற இடங்கள் எல்லாம் இதை எடுத்துச் சென்று பரப்பியிருக்கின்றனர். 

  

பல்லாங்குழி பற்றிய குறிப்புகள் பல தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. மொழி ஞாயிறு தேவனேயப்பாவாணர் தமிழரின் தொன்மையான, தமிழ் மண்ணின் மரபு மாறாத விளையாட்டுகளைப் பற்றி ஒரு தனி நூலே எழுதியிருக்கிறார்.

அதில் விளையாட்டு என்ற பதத்தின் பொருளைப் பின்வருமாறு அழகாக விளக்குகிறார். “விளை என்றால் விருப்பு என்றும், ஆட்டு என்றால் ஆட்டம் என்றும் பொருளாகும். எனவே, விரும்பியாடும் ஆட்டு, விளையாட்டு என்றானது. விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய இம் மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். விளையாட்டால் ஒருவருக்கு உடலுரம், உள்ளக் கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத் திறம் வாழ்நாள் நீட்டிப்பு முதலியன  உண்டாகின்றன.”

செப்பேட்டில் பல்லாங்குழி

பல்லாங்குழி என்ற சொல் கி.பி 550-இல் பல்லவ மன்னன் சிம்மவர்மன் வெளியிட்ட பள்ளன்கோவில் செப்பேட்டில் காணப்படுகிறது. வஜ்ரநந்தி குரவர்க்கு பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்ட நிலத்துக்கு நாற்பால் எல்லைகளைச் சொல்லுகையில் கீழ்க்கண்ட வரி வருகின்றது:

"வட பால் எல்லை பல்லாங்குழிக் காவின் தெற்கும்"

பல்லாங்குழிகள் நிறைந்த தோட்டம் அல்லது பல்லாங்குழி போல பல குண்டும் குழியும் நிறைந்த தோட்டம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். என்ன பொருளாக இருந்தாலும் பல்லாங்குழி என்ற சொல் அப்போதே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்.

பல்லாங்குழி என்றால் என்ன?

“இது ஒரு விளையாட்டுப் பலகை. இதில் பக்கத்திற்கு ஏழாக இரண்டு பக்கத்திற்கு 14 குழிகளில் குழிக்கு ஐந்தாக 70 காய்களைக் கொண்டு ஒவ்வொரு குழியிலுள்ள காயை ஒவ்வொன்றாக எடுத்து இருவர் குழியிற் போட்டு ஆடுகையில் யாருடைய பக்கத்தில் காய்கள் எல்லாம் சேர்ந்துவிடுகின்றனவோ அவர்கள் வென்றவர்களாம். இது ஒரு வகை. இதிற் இன்னும் பலவகை யுண்டு” (பக்கம் 1052, அபிதான சிந்தாமணி)

பல்லாங்குழி ஆட்டத்தின் நெறிமுறைகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

•    இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத் தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.
•    தன்னுடைய காய்களை எடுத்து ஒருவர் ஆட்டம் தொடங்குகிறபொழுது முதன்முறையாக சமத்தன்மை குலைகின்றது.
•    எடுத்தாடுபவர் குழியில் காய்கள் இழப்புக்கு உள்ளாகின்றன.
•    சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழி (இன்மை அல்லது இழப்பு) யினைத் துடைத்து அடுத்து முதலில் இட்ட ஐந்து காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் (பெருஞ்செல்வம்) கிடைக்கின்றன.
•    ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார்.
•    இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் (தொடக்க நேரத்து முழுமை) மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.
•    காய்களை இழந்தவர் தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.
•    ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.
•    தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.

பயன்கள்

பல்லாங்குழி விளையாடுவதால் மன ரீதியாக எண்ணிக்கைத்திறன், நுண்ணிய கணிதத்திறன் அதிகரிக்கிறது. உடல் ரீதியாக விரல்களின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

பல்லாங்குழி ஆட்டத்தின் மூலம் மனக்கணக்கு, மனதைக் குவியப்படுத்தும் சக்தி, பொதுவாக கணக்கில் ஆர்வம் உண்டாகும்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை