September 28, 2021 Tuesday 10.36 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Apr 3 2020 4:47 AM

இன்னும் ஒரு மைல் தூரம் !

Posted Date : Apr 3 2020 4:47 AM

இன்னும்
ஒரு மைல் தூரம் தான் ...
என் கிராமம் வந்துவிடும்

இன்னும்
ஒரு மைல் தூரம் தான் ...
நான் ராஜாவாய் வீற்றிருக்க
என் குடிசை மாளிகை வந்துவிடும்

இன்னும்
ஒரு மைல் தூரம் தான் ...
அள்ளி அள்ளி அருந்திட
சிற்றாறு தென்பட்டு விடும்

இன்னும்
ஒரு மைல் தூரம் தான் ..
நான் பசியோடு வருவதையறிந்து
உலையினை கொதிக்க வைத்திருப்பாள்
பெற்றவள்

இன்னும்
ஒரு மைல் தூரம் தான் ...
அப்பன் வருவான்
கட்டி அணைத்து முத்தமிடுவானென
ஆட்டிக்கொண்டிருக்கும் தொட்டிலிலும்
தூங்காது விழித்திருப்பான் அவன்

இன்னும்
ஒரு மைல் தூரம் தான் ...
கல்யாண சேலையினை உடுத்தி
நெற்றியில் வட்ட குங்குமமிட்டு
வாசலிலேயே காத்திருப்பாள்
அவள் !

என்ன ஒன்று ? இவையெல்லாம் ,

நான்
கால்கடுக்க நடந்து ,
சுருண்டு விழுந்து ...
மரணித்திருக்கும் சாலையின்
இந்த இடத்திலிருந்து

இன்னும்
ஒரு மைல் தூரத்தில் தான் !

- யுவன்முத்து  !

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை