September 28, 2021 Tuesday 11.11 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன்முத்து
Posted Date : Aug 28 2020 12:58 AM

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ம் தேதி திறப்பு !

Posted Date : Aug 28 2020 12:58 AM

சென்னை :

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கங்களுடனான ஆலோசனைக்கு பிறகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 18ம் தேதி மொத்த உணவு தானிய கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சந்தை திறப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ்  வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு காய்கறி சந்தை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் ஆரம்பத்திலிருந்தே சென்னையில் அதிகரித்த வண்ணமாக உள்ளது. தொற்று பரவல் அதிகரித்ததற்கு காரணம் கோயம்பேடு காய்கறி சந்தைதான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சந்தை உடனடியாக மூடப்பட்டது. பின்னர் திருமழிசைக்கு காய்கறி சந்தை மாற்றப்பட்டது.

மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே திருமழிசையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்றது. வியாபாரிகள் மட்டுமல்லாமல் பொது மக்களும் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மாநகருக்கு வெளியே அமைந்துள்ள்ள திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் அதற்கு வழி இல்லை.

இதனால் காய்கறிகள், பழங்கள் விற்பனை குறைந்து டன் கணக்கில் வீணாகிவருகின்றன. கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தை இடமாற்றத்தால் வியாபாரிகள் பெரியளவில் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

அதற்கு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

அதேபோல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒருவழிப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே அங்காடி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும், அங்காடி வளாகத்திற்குள் மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமும் அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் ரத்தப் பரிசோதனைகளை செய்த பின்னரே அங்காடிக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை