August 02, 2021 Monday 04.44 PM
Newsletter Home

சற்றுமுன்

Arun Praba
Posted Date : Oct 23 2018 7:44 AM

தொல்காப்பியம்

Posted Date : Oct 23 2018 7:44 AM

தொல்காப்பியம் என்பது இதுவரை கிடைக்கப்பெற்ற இலக்கண நூல்களில் மிகப் பழமையான மூத்த இலக்கிய வடிவிலிருக்கும் தமிழ் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். மிகப் பழங்காலத்து நூலாக இருந்தாலும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும். 

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவிவருகின்றன. 

தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம். 
மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்றழைக்கப்படுகிறது. 

தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ்மரபையும் விளக்குகிறது

சிறப்புப்பாயிரம் 
வட வேங்கடம் தென் குமரி 
ஆயிடைத் 
தமிழ் கூறும் நல் உலகத்து 
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் 
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு 
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் 
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல் 
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து 
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10 

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து 
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி 
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த 
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் 
பல் புகழ் நிறுத்த படிமையோனே. 15 

எழுத்ததிகாரம்
1.    நூல் மரபு
2.    மொழி மரபு 
3.    பிறப்பியல்
4.    புணரியல்
5.    தொகைமரபு
6.    உருபியல்
7.    உயிர்மயங்கியல்
8.    புள்ளிமயங்கியல்
9.    குற்றியலுகரப் புணரியல் 

சொல்லதிகாரம்
1.    கிளவியாக்கம் 
2.    வேற்றுமையியல்
3.    வேற்றுமை மயங்கியல்
4.    விளிமரபு
5.    பெயரியல் 
6.    வினையியல் 
7.    இடையியல் 
8.    உரியியல்
9.    எச்சவியல்

பொருளதிகாரம்
1.    அகத்திணையியல்
2.    புறத்திணையியல்
3.    களவியல்
4.    கற்பியல்
5.    பொருளியல்
6.    மெய்ப்பாட்டியல்
7.    உவமயியல்
8.    செய்யுளியல்
9.    மரபியல்
தொல்காப்பியம் தமிழ் மொழியின் இலக்கணம் கூறும் நூல். தமிழ் மொழியில் உள்ள சொற்களில் பயின்றுவரும் எழுத்துக்களையும் அதன் வகைகளையும் கூறுவது எழுத்ததிகாரம். சொல்லப்படும் சொற்கள் கருத்தைப் புலப்படுத்தும் வகையில் வாக்கியங்களாக அமைவதையும் சொல்லின் வகைகளையும் கூறுவது சொல் அதிகாரம். தமிழ் நூல்கள் சொல்லும் பொருளையும் சொல்லும் பாங்கினையும் கூறுவது பொருளதிகாரம்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை