September 29, 2020 Tuesday 10.24 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 15 2020 11:26 AM

"ஹிந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் ஏன் மும்மொழி கொள்கை ஏன் ? " கொதிக்கும் கர்நாடகா

Posted Date : Sep 15 2020 11:26 AM

பெங்களூரு: ஹிந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் ஏன் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுகிறது என கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹிந்தியை அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட செப்.,14ஐ ஹிந்தி தினமாக கொண்டாடி வருகின்றனர். இது குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நாட்டில் பல்வேறு மொழிகள், கலாசாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் கன்னடம் உள்பட பிற மொழிகள் மீது ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சி நடந்து வருகிறது. ஹிந்தி தின விழா கொண்டாடியது கூட அத்தகைய நோக்கம் கொண்டது தான். மொழி ஆணவத்துடன் கொண்டாடப்படும் ஹிந்தி தின விழாவுக்கு கன்னடர்களின் எதிர்ப்பு உள்ளது. ஹிந்தி தேசிய மொழி அல்ல. அத்தகைய ஒரு அம்சம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை.

இருந்தாலும் ஹிந்தி தேசிய மொழி என்று முன்னிறுத்தும் முயற்சி முன்பு இருந்தே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அது மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் பிற மொழியினர் கிளர்ந்து எழுவதற்கு முன்பு ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் மொழிகளை தேர்ந்தெடுத்து கற்கலாம். ஆனால் ஒரு மொழியை திணித்து கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தினால் அது சாத்தியமில்லை. நாட்டின் ஒற்றுமை, கலாசாரத்திற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது. ஹிந்தி தின விழா கொண்டாடுவது போல், கன்னடம் உள்பட பிற மொழிகளின் தின விழாவையும் கொண்டாட வேண்டும்.

ஹிந்தி விழாவை போல் மும்மொழி கொள்கையை முன்னிறுத்தும், தேசிய கல்வி கொள்கையிலும் ஹிந்தியை திணிக்கும் முயற்சி இடம் பெற்றுள்ளது. இருமொழி கொள்கை இருந்தால் என்ன பிரச்சினை?. ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறதா?. ஹிந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் ஏன் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக ஹிந்தி மொழி சித்தாந்த ரீதியாக மாற்றப்பட்டு வருகிறது. தேசிய வாதம், தேசபக்தி, இந்துத்துவாவுடன் ஹிந்தி மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி மிகப்பெரிய தேசத்துரோகம். பல்வேறு மொழி பேசும் நமது நாட்டில், ஹிந்தி மூலம் தேசபக்தியை ஏற்படுத்த முயற்சி செய்வது சரியா?. இது ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை