December 06, 2020 Sunday 07.10 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 17 2020 6:51 AM

பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது ஏன் ? திராவிட கட்சி திமுகவானதற்கு இது தான் காரணமா ?

Posted Date : Sep 17 2020 6:51 AM

செப்டம்பர் 17 தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நாள் என சொல்லலாம். திராவிட சித்தாந்தம் தமிழகத்தில் கோலூன்றிக் கொண்டிருந்த காலமது. பெரியாரின் நீதிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய அண்ணாவிற்கும், பெரியாருக்கும் இடையே உண்டான கருத்து முரணுக்கு மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டது தான் காரணமா? என பலராலும் பலவிதமான கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. உண்மையில் இவை இரண்டுக்கும் இடையில் நிறைய பின்புலக்காரணங்கள் இருக்கின்றன. 

மணியம்மையை மணந்த பெரியார்
      பெரியார் தனது காலத்திற்கு பின்பு தனது சொத்துகளை பாதுகாக்க வாரிசு தேவைப்பட்டது. அப்போது அவர் அண்ணனின் மகனான ஈவிகே சம்பத்தை வாரிசாக தேர்ந்தெடுக்க நினைத்தார். ஆனால் அவர் அண்ணாவின் ஆதராவாளராக இருந்ததால் அந்த திட்டத்தை கைவிட்டார். பெரியார் என்ன தான் சுயமரியாதை கொள்கையை கடைபிடித்தாலும் இந்துத்துவ சட்டதிட்டங்களை ஏற்றார். அதற்குள்ளிருந்தே அதனை சீர் செய்ய முடியும் என நம்பினார். மேலும் பெரியாரின் சொத்தென்பதும், திராவிடகழகத்தின் சொத்தென்பதும் வேறில்லை. அதனால் தான் இல்லாத காலத்தில் அந்த சொத்து மக்களின் சீர்திருத்ததிற்கு சரியாக பயன்படுத்த பட வேண்டும் எனில் அதற்கு நம்பிக்கையான ஆள் வேண்டும் என நினைத்தார் , அதனால் தனது வளர்ப்பு மகளான மணியம்மையை அவர் திருமணம் செய்து கொண்டார்.


பெரியாரிடம் , அண்ணாவிற்கு உண்டான முரண் 
     பெரியாரின் கொள்கையை அண்ணா முழுமையாக ஏற்றுக்கொண்டாலும் ஒரு சில விசயங்களில் இருவரிடமும் முரணிருந்தது. உதாரணமாக திராவிட கழக தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிய வேண்டும் என பெரியார் கூறியதை அண்ணா ஏற்கவில்லை. வெள்ளை சட்டை, வேட்டி தான் நம் தமிழர்களின் உடை என நிராகரித்தார். மேலும் பெரியாரின் கடுமையான கடவுள் மறுப்பும் அண்ணாவிற்கு பிடிக்கவில்லை. எனவே தான் திரைக்கதை எழுதிய வேலைக்காரி படத்தில் ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என எழுதினார். மேலும் இந்தியாவின் சுதந்திர தினத்தை பெரியார் கருப்பு தனிமாக கொண்டாட வேண்டும் என்றார். வெள்ளைகாரர்கள் போய் பார்ப்பனர்கள் கையில் ஆதிக்கம் வந்ததை அவர் விரும்பவில்லை. ஆனால் அண்ணா இரு எதிரிகளில் ஒருவரிடமிருந்து விடுதலை கிடைத்தது நல்லது என முரண்பட்டார், அண்ணா தனியாக திராவிட முரசு என பத்திரிக்கையை துவங்கி அதன் மூலம்  தனது முரண்பட்ட கருத்துகளை அதில் வெளியிட்டு வந்தார்.
 

மணியம்மை திருமணம் தான் திமுகவிற்கு காரணமா ? 
   பெரியார் மணியம்மையை மணந்த பிறகு அண்ணா கட்சியின் ஒழுக்கம் சீர்கெட்டுவிட்டதென கட்சியிலிருந்து பிரிந்தார் என்பது அண்ணா தரப்பினரின் வாதம். ஆனால் பெரியார் விடுதலை இதழில் எழுதிய கட்டுரைகளில் சொத்து கிடைக்கவேண்டுமென அவர்களின் ஆசையை நான் தடுத்துவிட்டேன் என அவர்கள் தனியாக போகிறார்கள் என விமர்சிக்கிறார். ஆனால் அண்ணாவிற்கு அரசியல், ஆட்சி மூலமாக தான்  சமூக சீர்த்திருத்ததை கொண்டுவரமுடியும் என நம்பினார். உண்மையில் பெரியாருக்கு ஆட்சியிலிருந்து தான் நன்மை செய்ய வேண்டும் என்பதில் உடன்பாடில்லை.இவ்வாறு பல கருத்து முரண்கள் இருவரிடமும் இருந்தது.மணியம்மையோடு , பெரியார் திருமணம் செய்து கொண்ட அண்ணா கட்சியிருந்து பிரிய வலுவான காரணமாக அது அமைந்தது. இப்படி பார்த்தால் இருவரிடமும் தங்களது கருத்து ரீதியாக முரணிருந்தாலும் பெரியாரின் கொள்கையை அண்ணா ஆட்சிக்கு வந்ததும் சட்டப்படுத்தினார், மேலும் தான் முதலமைச்சராக பதவியேற்றதும் அண்ணா பெரியாரிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றார். அதற்கு பின் வந்த திராவிட கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடவுளை தீவிரமாக எதிர்ப்பதை குறைத்துக்கொண்டனர். அண்ணா கூட நான் பிள்ளையார் சிலையை உடைக்க மாட்டேன், பிள்ளையார் சிலைக்கு தேங்காயும் உடைக்கமாட்டேன் என சொல்வதுண்டு. 


  பொதுவாக இன்றைய இணைய சமூகத்தில் பெரியாரை எதிர்க்க இந்த பெரியார்,  மணியம்மை திருமணத்தை கூறி அவரை கேலி செய்வதுண்டு, உண்மையில் அந்த திருமணம் தான் இன்றைக்கு திமுக என கட்சியை உருவாக்கி அதிலிருந்து அதிமுக எனும் கிளை கட்சி உருவாகி தமிழகத்தின் தலையெழுத்தே மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

--சிபி சரவணன்


 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை