August 02, 2021 Monday 06.04 PM
Newsletter Home

சற்றுமுன்

Arun Praba
Posted Date : Oct 24 2018 5:20 AM

எட்டுத்தொகை நூல்கள்

Posted Date : Oct 24 2018 5:20 AM

சங்க நூல்களை எட்டுத்தொகை என்றும், பத்துப்பாட்டு என்றும் பகுத்துக் காண்கின்றனர். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள 10 பாட்டுகளும் தனித்தனி முழுமையான பாட்டுகள். எட்டுத்தொகையில் உள்ள எட்டு நூல்களும் தொகைநூல்கள். அதாவது தொகுக்கப்பட்ட நூல்கள். 

எட்டுத்தொகை அல்லது தொகை நூல்கள் என்பவை சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டவை ஆகும். இவற்றில் சில பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றியப் பாடல்களைக் கொண்டு இந்நூல்களைப் பகுக்கின்றனர். 

தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்ப்பட்டமையால் இது தொகை எனப் பெயர் பெற்றது. இந்தத் தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். படியப் புலவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உள்ளடக்கம். ஆசிரியர் யார் எனத் தெரியாதப் பாடல்கள் 102 உள்ளன.

எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்ற அனைத்தும் ஆசிரியப்பாவால் அமைந்து ஒருசில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும், 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய நன்னூல் வெண்பா பின்வருமாறுக் குறிப்பிடுகிறது.

“நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”

இவற்றுள்,

•    அகப்பொருள் பற்றியவை 
நற்றிணை
 குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு.

•    புறப்பொருள் பற்றியவை
புறநானூறு
பதிற்றுப்பத்து.

•    அகமும் புறமும் இணைந்து வருவது 
பரிபாடல்.

அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், வேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.

பரிபாடலில் எட்டு பாடல் அகம் பற்றியன. இவை கடவுள் பற்றிய பாடல்களாகவும், தனிப்பாடல்களாகவும், ஆசரியப்பாவால் இயற்றப்பட்டவை. புறநானுற்றில் வஞ்சிப் பாடல்கள் சிலவுள்ளன. இடத்திற்கேற்ப தேவையான துறைகளுள் பாடல்களைப் பாடியுள்ளனர். 

புறத்திணைகளுள் வாழ்க்கைக்கு என்றும் இன்றியமையாத அறங்களையும், ஒழுக்கங்களையும் வலியுறுத்தும் பாடாண் முதலிய துறைகளைப் பாடியுள்ளனர். கிடைத்த பாடல்களில் குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நூறு என ஒரு வகையாகத் தொகுத்தனர். ஐங்குறுநூற்றுள் பாலைக்கும் ஒரு நூறு பாடல்கள் தொகுக்கபப்ட்டன. பிற்காலத்தார் நான்கு திணைப் பாடல்களை ஐந்திணைக்கும் பலவகையாகப் பிரித்திருக்கக்கூடும். பாடலகளின் அடி அளவுகளைக் கொண்டு பல தொகை நூல்களைத் தொகுத்துள்ளனர்.

3அடிச் சிறிய அளவாகவும் 6அடிப் பெரிய அளவாகவும் உடைய பாடல்களை ஐங்குறுநூறு என்றனர். ஐந்து புலவர்கள் நூறுநூறாக பாடிய தனித்தன்மையையும் உடையது இந்நூல் ஆகும். சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் ஆதரவால் கூடலூர்க்கிழார் என்பவர் இதனைத் தொகுத்தார்.

4 - 8 அடி எல்லையினையுடையப் பாடல்களைக் குறுந்தொகை ஆக்கினர். 
9 - 12 அடி எல்லையினையுடையப் பாடல்களை நற்றிணையாக அமைத்தனர். 
13 - 31 அடிப்பாடல்கள் நெடுந்தொகையாய் அகநானூறு ஆயின.

அகத்திற்கு நானூறு என்பதற்கேற்ப புறத்திற்கும் நானூறு பாடல்களைத் தொகுத்தனர். புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறத்தை பற்றியன. மற்றவை அகம் பற்றியன. சிறப்பாக ஒரு பகுதியைப் பேசினாலும் திணை நூல்களின் பாடல்களை அறம், பொருள் ,இன்பம் என்னும் முப்பகுதிகளைப் பற்றிய உண்மைகளை இடையிடையே தம்முள் விரவப் பெற்றுள்ளன. 

புறப்பாடல்களில் அரசரின் போர்கள், கொடை ஆகியவை பற்றியும், அகப்பாடல்களில் வாழ்க்கைக்குரிய ஒழுக்கவுண்மைகளைப் பற்றியும் அரிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 

கடையெழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்கள் புறநானூற்றிலும் அகப்பாடல்களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. கடைச்சங்கத் தொடக்கத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், கரிகாலனும் புலவர்களைப் பெரிதும் ஆதரிக்கும் அரசர்களாகத் திகழ்ந்துள்ளனர். அக்காலத்தே ஆண்ட சேர, சோழ, பாண்டியர், சிற்றரசர்கள் குறுநில மன்னர் ஆகியயோரைப் பற்றிய குறிப்புகள் புறநானூற்றில் மிகுதியாகவும் அகநூல்களில் ஓரிரு வரிகளாகக் கலந்தும் காணப்படுகின்றன.

பொதுவாக எட்டுத்தொகை நூல்களில் பண்டைத் தமிழ் அரசர்களின் போர்த்திறங்களையும், வரையாது வழங்கும் வள்ளன்மைப் பண்பையும், மறக்குடி மகளிரின் மாண்பினையும், போர்த் தவிர்க்க இடைநின்ற சான்றோர்களின் இயல்புகளையும், ஐந்திணைக்குரிய அன்பொழுக்கங்களையும், புராணச் செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் அறியலாம்.
பல புலவர்கள் பாடிய பாடல்கள் ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ளன. ஒவ்வொரு நூலையும் தொகுத்தவர் யார்? தொகுக்க உதவியவர் யார்? என்னும் செய்திகளை இப்போது காணலாம்.

அகநானூறு(அகம்), (அகப்பாட்டு), (நெடுந்தொகை) பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன், இதனைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆவார்.

ஐங்குறுநூறு பாடல்களைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார், தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார் ஆவார்.

கலித்தொகை பாடல்களைத் தொகுத்தவர் நல்லந்துவனார், தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை.

குறுந்தொகை தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவார்.

நற்றிணை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை, தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

பதிற்றுப்பத்து, பரிபாடல் (பரிபாட்டு) மற்றும் புறநானூறு (புறம்) இவை மூன்றையும் தொகுத்தவர் யார் மற்றும் தொகுப்பித்தவர் யாரென்ற தகவல் கிடைக்கப்பெறவில்லை.

Comments Here

  • Manimuthu raja Nov 07,2019 | 07:12 AM

    Super in Tamilnadu forman

  • Manimuthu raja Nov 07,2019 | 07:12 AM

    Super in Tamilnadu forman