October 29, 2020 Thursday 10.46 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Oct 17 2020 8:34 AM

1 லட்சம் செலுத்தி கோச்சிங் சென்றேன் - அரசுப் பள்ளி மாணவனின் வெற்றிக்கு தடையாக இருந்தது எது ?

Posted Date : Oct 17 2020 8:34 AM

நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் தமிழகத்தைச் சார்ந்த ஜீவித்குமார் முதலிடம் வந்துள்ளார் என்கிற செய்தியை கொண்டாடவா ? இல்லை வருத்தப்படவா என்கிற நிலை உருவாகியுள்ளது .காரணம் லட்சக் கணக்கில் செலவு செய்து படித்தால் மட்டும் தான் தேர்சி அடைய முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது .

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜீவித்குமார். இவர் உள்ளூரில் 8-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தார். பின்பு சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 வரை படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 548 மதிப்பெண் பெற்று முதல் மாணவராக வெற்றி பெற்றார். படிப்பில் சிறந்து விளங்கியதால் இவரை நீட் தேர்வு எழுத பள்ளி தலைமையாசிரியர் மோகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தினர். பள்ளியிலேயே பயிற்சியும் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நீட்தேர்வு எழுதினார். இதில் 720-க்கு 190 மதிப்பெண் பெற்றார். இருப்பினும் இரண்டாம் முறையாக தற்போது இத்தேர்வை எழுதி 664 மதிப்பெண் பெற்றுள்ளார். அரசுப்பள்ளி பிரிவில் இவர் தேசிய அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் 1823வது இடத்தைப் பெற்றுள்ளார்.

இவரது தந்தை நாராயணசாமி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.கொரோனாஊரடங்கினால் வேலைஇழந்ததால் சொந்த ஊருக்கு வந்து ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். தாய் மகேஸ்வரி நூறு நாள் வேலைத்திட்டம் மற்றும் தையல் தொழிலையும் செய்து வருகிறார்.

சாதனை படைத்த மாணவர் ஜீவித்குமார் கூறுகையில், "தாய் மொழி வழியிலான படிப்பு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. முதல் முறை தோற்ற போதும், இத்தேர்வில் அடுத்த முறை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததுதான் இதற்குக் காரணம். எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் இம்முறை ராசிபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். ரூ.1.10லட்சம் செலுத்தி 10 மாதம் அங்கேயே தங்கிப்படித்தேன். தேர்வு குறித்து அங்கு நிறைய விஷயங்கள் தெரிந்தது. வாரம் இரண்டு முறை தேர்வு, தினமும் 10 மணி நேர படிப்பு போன்றவை தேர்வை எளிதாக்கியது.

தேர்வு நெருங்கிய போது தினமும் மாதிரித்தேர்வு எழுதி பயிற்சி பெற்றேன். சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து படித்தேன். அது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

அரசுப் பள்ளியில் படித்து நீட்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதைக் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். தாய்மொழி பாடத்திட்டத்தின் மூலம் புரிந்து படித்தவர்கள் எந்தத் தேர்வையும் தைரியமாக எதிர்கொள்ளலாம். பள்ளி நிர்வாகம்தான் என் மேல் நம்பிக்கை வைத்து உற்சாகப்படுத்தியது. இந்த வெற்றிக்கு அதுதான் மூலகாரணம்" இவ்வாறு அவர் கூறினார்.

இவரின் வெற்றி கதை இப்படி இருக்க , தேசிய அளவில் 720 மதிப்பெண்களுக்கு 720  மதிப்பெண் எடுத்த மாணவர்களின் வெற்றியை தங்களது வெற்றியாக பல்வேறு கோச்சிங் செண்டர்கள் உரிமை கொண்டாடுவது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

லட்சங்கள் இருந்தால் அனிதாவும் , அனிதாவும் போன்ற மாணவர்களும் கூட சுலபமாக தேர்ச்சி அடைந்திருப்பார்கள் இல்லையா ? இறந்த அத்தனை மாணவர்களுக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வசதி இருந்தால் அவர்கள் ஏன் தூக்கு கயிற்றை முத்தமிட போகிறார்கள் .

அவர்களிடம் கனவும் , திறமையும் மட்டுமே சொத்தாக இருந்தது .கல்வியை வியாபாரமாக்கும் கோச்சிங் செண்டர்கள் இனி முளைத்த வண்ணம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை .

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை