December 06, 2020 Sunday 07.40 AM
Newsletter Home

சற்றுமுன்

அருள் ரூபன்
Posted Date : Oct 21 2020 11:21 AM

நீட் யாருக்கானது ? 7.5 % மருத்துவ இட ஒதுக்கீடு என்பது நாடகமா..?

Posted Date : Oct 21 2020 11:21 AM

நீட் தேர்வு முடிவுகளும் , ஏற்படுத்திய குழப்பங்களும் : 
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்விற்காக தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 21,617 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 99,610 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில்நீட் தேர்வு முடிவுகள் அக்.16-ல் வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.


தேர்வு எழுதியோரின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை அதிகம்.திரிபுரா மாநிலத்தில் இந்த நீட் தேர்வினை 3,536 பேர் எழுதினர். ஆனால்  88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வந்துள்ளன. அதேபோல் உத்தரகான்ட் மாநிலத்தில் இந்த தேர்வினை 12,047 பேர் எழுதினர். ஆனால்  37,301 பேர் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் தெரிவிக்கின்றன . எந்த நாட்டிலும் நடைபெறாத விசித்திரமான நிகழ்வுகள் எல்லாம் இங்கு தான் நடைபெறுகின்றன. தேர்ச்சி முடிவுகள் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாக மாறியதும் தேர்வு முடிவுகள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டு ,புதிதாக பதிவேற்றப்பட்டன .


மற்றொரு குற்றச்சாட்டு என்னவென்றால் மாணவர்கள் தேர்வு எழுதிய ஓஎம்ஆர் எனப்படும் விடைத்தாளில் குளறுபடி நடந்திருப்பதாகவும்,  அதனை மாற்றி வேறு ஒரு விடைத்தாளை கூட இணைத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது எனவும் புகார்கள் எழுந்துள்ளது .இது குறித்து புகார் செய்தும் அரசிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இந்த நிகழ்வுகள் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் பொறுப்பற்றதாகவும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை கேலிக்கூத்தாக்கும் செயல் என கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சாதனையிலும் , வேதனையிலும் தமிழக மாணவர்கள் :
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீஜன் என்ற மாணவர் 710 மதிப்பெண்கள் எடுத்து தமிழக அளவில் முதலிடமும், தேசிய அளவில் 8-ஆவது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் ஜீவித்குமார் என்ற மாணவர் 644 மதிப்பெண்கள் எடுத்து இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடமும் பிடித்துள்ளார் . ஒருபுறம் இதுப்போல மகிழ்ச்சியான சாதனைகளை பார்க்க நேர்ந்தால் , தேர்வின் முடிவால் மாணவர்கள் பலர் வேதனையில் புலம்புவதையும் காண முடிகிறது 


அரியலூர் மாவட்டம் தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு. இவர் நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்பிற்கு சென்று கடின உழைப்புடன் இந்த தேர்வினை எதிர் கொண்டுள்ளார். இந்த தேர்வில் 680 மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற கனவுடன் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த மதிப்பெண்கள் வெறும் 37 மட்டுமே. இதனால் மிகவும் மன வேதனை அடைந்த மஞ்சு தான் எழுதிய விடைத்தாளில் குளறுபடி நடந்திருப்பதாக எண்ணுவதாகவும், விடைத்தாளின் அசல் சான்று வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் கோவையை சேர்ந்த மாணவரும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார். எனவே தேசிய தேர்வு முகமை இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்த குளறுபடிக்கு என்ன காரணம்.?

ஒட்டு மொத்தமாக தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை படுகுழியில் தள்ளும் செயலாக இது இருக்கிறது. மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொள்ளும் அமைப்பாக இருந்தால், தமிழக மாணவர்களின் கனவுகளுக்கு மதிப்பளித்து, இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது .

அது என்ன ? 7.5 % இடஒதுக்கீடு :

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், நடப்பாண்டில் சுமார் 400 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இது சாதாரண விஷயமல்ல. கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 3 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து வந்த நிலையில், இப்போது அதை விட 100 மடங்குக்கும் கூடுதலாக இடம் கிடைக்கும் .

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5  சதவிகித உள் இடஒதுக்கீடு சட்ட மசோதா நிலுவையில் உள்ளது. அந்த இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தால்தான் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு சாத்தியமாகும். அந்த மசோதா தற்போது தமிழக கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த ஒப்புதல் வரும்வரை தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விரைவில் அந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும். அந்த சட்ட மசோதாவில் கவர்னர் சாதகமான முடிவை எடுப்பார் என மாணவர்கள் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கனவை கலைத்த நீட் :

மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் நேரில் கண்ட காட்சியை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நிகழ்வு ஒன்று  கண் கலங்க வைக்கக் கூடியதாக உள்ளது .
 
ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் மகள் சாந்தி.அரசுப்பள்ளியில் படித்துவிட்டு மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவில் தேர்வு எழுத தயாராகி வந்தார் .கொரோனா காரணமாக  கடந்த மாதம் நீட் எழுத முடியாமல் மறுதேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடந்தது. சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சாந்தி தன்னுடைய பழைய தேர்வு நுழைவு சீட்டுடன் அப்பாவுடன் வந்திருந்தார். அவர்கள் முகத்தில் கொஞ்சம் பதற்றம் தென்பட்டது. அப்போது அந்த மாணவியிடன் தேர்வு பற்றி கேட்டபோது, கொரோனாவினால் நீட் தேர்வு எழுத முடியவில்லை. மறு தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என தெரியவில்லை. யாருமே எதுவுமே சொல்லவில்லை. இன்று தேர்வு நடக்குன்னு தெரியும். அதனால் பழைய தேர்வு நுழைவு சீட்டுடோட வந்தேன்னு சொன்னாங்க சாந்தி. பழைய தேர்வு நுழைவு சீட்டு வைத்துக்கொண்டு தேர்வு எழுத முடியாது என்று அங்குள்ள அலுவலர்கள் சொன்னதும் முகத்தை குனிந்துகொண்டு போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சுட்டாங்க சாந்தி.

சாந்தியோட அப்பாவிடம், அய்யா.. மறு தேர்வுக்கு விண்ணப்பிக்க யாரும் உங்களுக்கு சொல்லி தரலையானு கேட்டால் அவர், ரொம்ப  நா தழு தழுக்க இல்லன்னு கைல சைகை காமிச்சிட்டு புறப்பட்டு போனார்..


சிறிது நேரத்துல மறு தேர்வு எழுத பிரபல தனியார் பள்ளியில் படிக்கின்ற ஒரு பொண்ணு தன்னோட அம்மாவோட காரில் வந்து இறங்குனாங்க.. நல்ல படிச்சிருக்காங்கன்னு அவுங்க பேசின இங்கிலீஷ் காட்டி கொடுத்தது. அவுங்க கிட்ட மறு தேர்வுக்கு எப்பிடி மா அப்ளை பன்னீங்கன்னு மெதுவா கேட்டேன்.. பொண்ணுக்கு கோவிட் உறுதியான அடுத்த நாளில் இருந்தே தொடர்ந்து NTI (தேசிய தேர்வு முகமை) க்கு மெயில்அனுப்பியிருந்தோம். ஒரு 4,5 மெயில்க்கு அப்புறம் பதில் வந்தது. மருத்துவ பரிசோதனை விபரங்களை பார்த்துவிட்டு ஹால் டிக்கெட் கொடுத்ததாக சொன்னாங்க..

ரெண்டு பொண்ணுங்களுக்கும் ஒரே கனவு.. ஆனா யார் தேர்வு எழுதணும், யார் எழுத கூடாதுங்கிறதுல ஒரு பெரிய செக்.யார் மருத்துவர் ஆகணுங்கிறது வெறும் மதிப்பெண்கள் மட்டும் தீர்மானிக்கவில்லை. அதுக்கு முன்னாடி எஸ்சாம் சென்டருக்குள்ள யார் நுழையனும் நுழையக்கூடாதுங்கிறத வெறும் ஹால் டிக்கெட்டே தீர்மானிச்சிடுது.
நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவ குழி தோண்டி புதைக்குதுன்னு செய்தி ல படிச்சிருப்போம்.. ஆனா இப்பொழுது தான் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகவும், நீட் சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்ப்பது யார் ? ஆதாயம் அடைவது யார் ?     

மாணவர்களை வைத்து அரசியல் கட்சியினர் ஆதாயம் தேடி கொள்கின்றனர். ஏதோ ஒரு நாள் போராட்டத்தோடு, தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்து விட்டு, தேர்தல் நேரத்தில் அதை வைத்து கொண்டு, அரசியல் லாபம் ஈட்டப்பார்கின்றனர். அவ்வாறு இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், மக்கள் பாதை அமைப்பு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக,மாணவர்களுக்கு ஆதரவாக சாகும் வரை உண்ணாநிலை போரட்டத்தில் குதித்தது. தொடர்ந்து ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்து தங்களது எதிர்ப்பினை தெரியப்படுத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் மாணவர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். ஆனாலும் இறுதியில் காவல்துறை அராஜகத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மக்கள் பாதையின் குரல், நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆதரவாகதான் இருந்து வருகிறது.



இதேப்போல் , அனிதாவின் மரணத்திற்காக தனது ஆசிரியர் பணியை உதறித் தள்ளிய சபரிமாலா கூறுகையில் , 
 ஜீவித்குமார் மாணவனின் வெற்றி , நீட்டுக்காக போராடி உயிர் நீத்த அனிதாவிற்கு சமர்ப்பணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மாணவர்களின் வெற்றியை வைத்து பாஜகவினர் தமிழக அரசின் வெற்றியாக கருதுகின்றனர். ஜீவித்குமார் இல்லத்திற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இது தங்களுக்கான வெற்றியாக நினைக்கின்றனர். ஆனால்  இது முழுக்க முழுக்க எங்களுடைய வெற்றி.

நாங்கள் பல்வேறு நபர்களிடம் சென்று நிதி திரட்டி அவனை எப்படியாவது டாக்டர் ஆக்க வேண்டும் என்று மிகவும் கடினப்பட்டு அவனை படிக்க வைத்துள்ளோம். அவனும் நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி அடைந்துள்ளான். ஆனால் இவர்கள் இன்றைக்கு வந்து இந்த வெற்றிக்கு பாஜக காரணம் தமிழக அரசு காரணம் என பெருமைப்பட்டு கொள்கிறார்கள். நீட் என்ற கொடிய தேர்வு முறைக்கு காரணமே இந்த பாஜக அரசு தான் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் .


மேலும் இது ஒன்றும் கொண்டாடப்பட வேண்டிய வெற்றி அல்ல. நீட் ,மாணவர்களின் கல்வி நலனுக்கான தேர்வு அல்ல. அது சமூக நீதிக்கு எதிரானது. எனவே நீட் என்னும் கொடிய தேர்வு முறையிலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என கல்வியாளர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.    

நீட் யாருக்கானது ?

 பாஜகவினர் வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் நீட் தேர்வுக்கு ஆதரவான செய்திகளையே பதிவிடுகின்றனர். இது சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு பதிவிடும்போது நீட்டுக்கு எதிரான அல்லது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளையும் பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவிடாமல் சாதக நிகழ்வுகளை மட்டும் பதிவிடுவது சமூகத்தில் நீட் குறித்து தவறான கருத்து மக்களை சென்றடைகிறது. அவ்வாறு புரிதல் இல்லாதவர்கள் நீட்டுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிடுகிறார்கள். இதனால் உண்மையான புரிதல் இல்லாமல் சில சமயங்களில் இதற்காக போராடும்போது அது தவறாக சித்தரிக்கப்படுகிறது.

புரிதல் இன்றி அவர்கள் ஆயிரம் கருத்துகளை  முன்வைத்தாலும் சரி , ஒன்று மட்டும் உறுதி ! நீட் .. ஏழை எளிய வீட்டு மக்களின் பிள்ளைகளுக்கானது அல்ல . பணத்தில் புரளும் மக்களுக்கானது மட்டுமே .பள்ளிப்படிப்பை தவிர்த்து லட்சக் கணக்கில் கோச்சிங் செண்டர் வாசலின் படியேறி படிக்குமளவுக்கு எங்களது அனிதா போன்ற மாணவர்கள் கொடுத்து வைக்கவில்லை 


கல்வியில் சீர்த்திருத்தம் என்று கம்பு சுத்தாமல் , கனவுகளுக்கு உயிர் கொடுக்க முன் வாருங்கள் !

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை